வழக்கமாய்
சென்னை வந்தால் வாக்கிங் போகும் பெசண்ட் நகர் பீச்தான். இந்த இரண்டு
நாட்களாய்த்தான் பாடாய் படுத்துகிறது. எதோ காலச்சக்கரத்தில்
ஏறிவிட்டாற்போல் ஒரு பிரமை. எல்லாம் பாழாப் போன விளம்பர நோட்டீஸ் ஒண்ணை
நடக்கறவங்க கிட்ட விநியோகம் பண்ண வரும் வில்லனால் வந்தது.
அப்பொழுது எனக்கு வயது சுமார் பத்து இருக்கும். நாங்கள் வசித்தது திருநெல்வேலியில். சரியாகச் சொல்ல வேண்டுமானால் திருநேலியில். இப்பொழுது
எல்லாம் ஊரே, தாமிரபரணியில் மணற்கொள்ளை, நெல்லையப்பர் கோயில்,
இருட்டுக்கடை அல்வா, போத்தீஸ், ஆரெம்கேவி என்ற ஒரு சின்ன வட்டத்திற்குள்
சிக்கிவிட்ட மாதிரி இருக்கு. நான் வளர்ந்த ஊரே வேற. நினைத்த பொழுதெல்லாம்
தாமிரபரணி ஆத்துக் குளியல்கள், பள்ளியூட நேரத்தில் இங்க என்னல
சுத்திக்கிட்டு கெடக்க என அன்பாய் ஏசும் அண்ணாச்சிமார்கள், மதிதா
மேல்நிலைப் பள்ளியின் சார்வாள்கள் என்று பேச ஆரம்பித்தால் முடிவில்லாமல்
நீண்டு விடும். இதை எல்லாம் ஒரு பக்கமாய் போட்டுவிட்டு இந்த ரெண்டு
நாளாய்க் குடையும் விஷயத்திற்கு வரலாம்.
திருநெல்வேலியில்
நாங்கள் இருந்தது ஜங்க்ஷனில். உலகத்திலேயே ரயில்வே ஸ்டேஷனைத் தவிர்த்து
ஒரு குடியிருப்புப் பகுதி ஜங்க்ஷன் எனப் பெயர் பெற்றது இங்கு மட்டும்தான்
இருக்கும். பத்து நிமிடம் சைக்கிளை மிதித்தால் வரும் இடம் டவுண். இந்த
மாதிரி வித்தியாசமான பெயர் எல்லாம் எப்படி வந்தது ஏன் வந்ததுன்னு
கேட்கக்கூடாது. அப்படித்தான்.
ஊரில்
எங்க திரும்பினாலும் ஒரு தியேட்டர் கண்ணில் படும். ராயல், பாப்புலர்,
செண்ட்ரல், ரத்னா, பார்வதி, விநோதமாய் பெயரிடப்பட்ட பாலஸ் டி வேல்ஸ் என
அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தத் தியேட்டர்களும் அதில் வரும் படங்களும்
அவற்றைப் பார்க்க நான் பட்ட கஷ்டங்களும் கூட இந்தப் பதிவுக்குத் தேவை
இல்லாதவை. விட்டுவிடலாம்.
பெரும்பாலும்
வெள்ளிக்கிழமை படம் மாறும். இன்றைக்கு இருப்பது போல ப்ளெக்ஸ்போர்ட்,
கட்டவுட், இணையத்தில் முன்பதிவு எல்லாம் இல்லாத காலம். புதுப்படம் வந்தா
ஒரு ரெட்டை மாட்டு வண்டியில் ரண்டக்க ரண்டக்கன்னு மேளம் கொட்டிக்கிட்டு
வருவாங்க. வண்டிக்கு ரெண்டு பக்கமும் பெரிய போஸ்டர் ஒட்டி இருக்கும். அவங்க
அள்ளி வீசும் கோவிந்தா மஞ்சள், அடிக்கும் ரோஸ் கலர் நோட்டீஸ்களைப் பிடிக்க
வண்டிக்குப் பின்னாடி தெருவில் இருக்கும் பசங்க பூரா ஓடுவாங்க.
எங்க
தெருவில் நாந்தான் இருக்கிறதுலயே சின்னப்பையன். அதனால எனக்கு அந்த
நோட்டீஸ் கிடைக்கவே கிடைக்காது. மத்த பசங்க எல்லாம் என்னைத் தள்ளிவிட்டு
எல்லா நோட்டீஸையும் வாங்கிடுவாங்க. என்னிக்காவது அப்பா கையில் கிடைத்த
நோட்டீஸை வெச்சு இருந்தாத்தான் உண்டு. மத்த பசங்க நோட்டீஸை வாங்குவாங்களே
தவிர அதை சுக்குநூறாக் கிழிச்சு ரோட்டில் போட்டுட்டுப் போயிடுவாங்க. எனக்கு
அந்த நோட்டீஸ் பின்னால அந்த போஸ்டரில் இருக்கிற மாதிரி படம் வரையப்
பிடிக்கும். எம்ஜியார் பட நோட்டீஸ்களில் இருக்கும் ஆக்ஷன் போஸ்ட்
படங்களைக் கிழித்து ரேழியில் இருக்கும் பீரோவில் ஒட்டி அடி வாங்குவேன்.
அதுக்காகவே ஒண்ணே ஒண்ணு கிடைக்காதான்னு அலைவேன். எனக்கு மட்டும் நோட்டீஸ்
தராமல் வண்டியில் போகும் ஆட்களை திட்டித் தீர்ப்பேன்.
இத்தனை வருடங்களுக்குப் பின் அந்த மாதிரி கிடைக்காதா என்று ஏங்க வைத்துவிட்டான் இந்த வில்லன். எல்லாம் இரண்டு நாட்களாகத்தான்.
நான்
போகும் அதிகாலை வேளையில் வயதானவர்கள் கூட்டம்தான். என்னமோ சிம்லா ரேஞ்சில்
பனிப்பொழிவதாக நினைத்துக் கொண்டு ஸ்வெட்டர், குல்லா, கழுத்தில் மப்ளர்
என்று சர்வாலங்காரத்துடன் அதே 'வேகத்தில்' உடன் நடக்கும் நண்பர்களோடு பேரன்
பேத்திகள் ஸ்கைப்பில் சொன்ன பிரதாபங்களை அசை போட்டுக் கொண்டு ஒரு கூட்டமே
நடக்கும்.
இவர்கள்
எல்லாருக்கும் நோட்டீஸைத் திணிப்பவன் நான் வரும் பொழுது மட்டும் கையை
இழுத்துக்கொண்டு எங்கேயோ பார்ப்பது போல விலகிப்போய்விடுவான். ஒரு நாளைக்கு
ஐந்தாறு சுற்றுகள் நடப்பேன், ஒவ்வொரு முறையும் எனக்கு மட்டும் நோட்டீஸ்
கிடைக்காது. இன்று அவனாகத் தராவிட்டாலும் கேட்டு வாங்கி விட வேண்டியதுதான்
என்ற முடிவோடு பீச்சுக்கு வந்தேன்.
எதிர்பார்த்ததைப்
போலவே அவன் நின்று கொண்டிருந்தான். நான் நெருங்கியதும் தூரப் பார்வை
பார்த்து நகர்ந்தான். "அது என்னப்பா நோட்டீஸ், ஒண்ணு குடு பார்ப்போம்"
என்று நான் கையை நீட்ட, வேறு வழியில்லாமல் ஒன்று தந்தான். கூடவே "உனக்கு
எதுக்கு சார் இது" என்ற இலவச அட்வைஸ்.
இரண்டாய் மடித்திருந்த நோட்டீஸைத் திறந்து பார்த்தால் சீனியர் சிட்டிசனுக்கான மெடிக்ளெயிம் முகவரின் விளம்பரம்.
விடிந்தும்
விடியாத நேரத்தில் தூக்கம் கெட்டு, தலைமுடி எல்லாம் கொட்டி வழுக்கையாய்
இருந்தாலும் இளமையாக இருக்கிறேன் என நோட்டீஸ் தராமல் போனவனைத் திட்டவே
தோன்றவில்லை.
PS: ரொம்பவே சுமாரக இருந்த என் எழுத்தை சூப்பராக்கிய தம்பி ராஜேஷ் கர்காவிற்கு (இலவசகொத்தனார்) மனமார்ந்த நன்றி...
No comments:
Post a Comment