தாயுமானவரின் தந்தை கேடிலியப்ப பிள்ளையின் காலத்திற்கு பிறகு திருச்சிராப்பள்ளியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் பெருங்கணக்கராக இருந்தார் தாயுமானவர். அரசு பணிகளை செம்மற செய்து வந்த போதிலும், அவருள்ளம் இறையருள் நாட்டத்திலேயே இருந்தது. எனவே அவர் இப்பதவியிலிருந்து வெளியேறினார். விராலி மலைப் பக்கம் சென்ற பொழுது அவருக்கு சித்தர்களின் கூட்டு ஏற்பட்டது. சித்தர்கணம் என்ற தொகுப்பை அவர் இந்த சந்தர்ப்பத்தில் பாடினார் என்று கூறப்படுகிறது.
கீழ் கண்டது சித்தர் கணத்திலுள்ள ஒரு பாடல்:
கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;
கற்றுமறி வில்லாதவென்
கர்மத்தை என்சொல்கேன் ? மதியையென் சொல்லுகேன் ?
கைவல்ய ஞான நீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன் ; கர்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன் ; வடிமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன் ;
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தக சித்தர்கணமே!
-----------------------------------
கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் – கல்வியைக் கல்லாதவர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
கற்றுமறி வில்லாதவென் கர்மத்தை என்சொல்கேன் ? – கல்வி கற்றும் அறிவு இல்லாத என் கர்ம பலத்தை என்ன சொல்லுவேன்?
கைவல்ய ஞான நீதி நல்லோருரைக்கிலோ – நல்லவர்கள் கைவல்ய பதவியைக் கொடுக்கின்ற ஞானநீதியை பற்றி சொன்னால்
கர்மமுக் கியமென்று நாட்டுவேன் – கர்மமே முதன்மையானது என்று நிலை நாட்டுவேன்
கர்மமொருவன் நாட்டினாலோ – ஒருவன் கருமத்தை நிலைநிறுத்தினால்
பழைய ஞானமுக் கியமென்று நவிலுவேன் – முன் சொன்ன ஞானமே முதன்மையானது என்று கூறுவேன்
வடிமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் – வடமொழியிலே வல்லவனான ஒருத்தன் வந்தால்
த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் – தமிழிலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரமாக சொல்லுவேன்
வல்ல தமிழறிஞர் வரின் – ஒரு வல்லமை பெற்ற தமிழ் அறிஞர் வந்தாலோ
அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – அங்கே வடமொழியின் சிறப்பு பற்றிய வாக்கியங்கள் எடுத்துரைப்பேன்
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகை வந்த – நியாயமாக வெல்லாமல் எவரையும் மருளும் படி செய்ய வகை ஏற்பட்டதிற்கு காரணமான
வித்தையென் முத்திதருமோ ? – வித்தையானது எனக்கு முக்தியைக் கொடுக்குமோ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற – வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும் சமமாக கருதக்கூடிய சிறந்த நிலையைப் பெற்ற
வித்தக சித்தர்கணமே! – ஞானத்தினையுடைய சித்தர் கூட்டமே!
-----------------------------------
கல்வி அறிவைத் தருமென்றும், அவ்வாறு கற்றவேண்டியவற்றை கற்றும், அக்கல்வி கூறியபடி நடக்காத கற்றவர்களைக் காட்டிலும், கல்லாத பேர்களே நல்லவர்கள் என்று பறைகிறார் தாயுமானவர்.
முக்தியைக் கொடுக்கும் ஞானமே முக்கியம் என்று ஒருவர் கூறினால், அவரிடம் கருமமே முக்கியம் என்று உரைத்தும், கருமம்தான் முக்கியமென்று சொல்பவரிடம், ஞானம்தான் பெரிது என்று விவகரித்துரைப்பேன்.
வட நாட்டு வித்தகரிடம் தமிழின் பெருமையையும், தமிழறிங்கர்களிடம் வட மொழியின் சிறப்பை எடுத்தோதுவேன்.
இவ்வாறொருவரை வெல்லாமல் மருளும்படி செய்யும் வித்தை என்ன பயனைத் தரும்? வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் சமமாக கருதும் நிலையடைந்த சித்தர் கூட்டமே!
-----------------------------------
சில சந்தேகங்கள்:
கைவல்யம் என்றால் என்ன? இது தமிழா அல்லது ஏதாவது வடமொழிச் சொல்லா?
ஒருவன் ஒன்றை பற்றி கூறும் பொழுது, மற்றதுதான் அதை விட நல்லது என்று வாதாடுவது எந்த வகையில் நல்லது?
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த வித்தையென் முத்திதருமோ ? – இதற்கு இன்னும் நல்ல முறையில் யாரவது விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.
நன்றி.