Friday, March 10, 2006

படிக்காதவங்களே நல்லவங்க – தாயுமானவர் சொல்லறார்

தாயுமானவரின் தந்தை கேடிலியப்ப பிள்ளையின் காலத்திற்கு பிறகு திருச்சிராப்பள்ளியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் பெருங்கணக்கராக இருந்தார் தாயுமானவர். அரசு பணிகளை செம்மற செய்து வந்த போதிலும், அவருள்ளம் இறையருள் நாட்டத்திலேயே இருந்தது. எனவே அவர் இப்பதவியிலிருந்து வெளியேறினார். விராலி மலைப் பக்கம் சென்ற பொழுது அவருக்கு சித்தர்களின் கூட்டு ஏற்பட்டது. சித்தர்கணம் என்ற தொகுப்பை அவர் இந்த சந்தர்ப்பத்தில் பாடினார் என்று கூறப்படுகிறது.

கீழ் கண்டது சித்தர் கணத்திலுள்ள ஒரு பாடல்:

கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;
கற்றுமறி வில்லாதவென்
கர்மத்தை என்சொல்கேன் ? மதியையென் சொல்லுகேன் ?
கைவல்ய ஞான நீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன் ; கர்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன் ; வடிமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன் ;
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தக சித்தர்கணமே!
-----------------------------------
கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் – கல்வியைக் கல்லாதவர்களே நல்லவர்கள் நல்லவர்கள்

கற்றுமறி வில்லாதவென் கர்மத்தை என்சொல்கேன் ? – கல்வி கற்றும் அறிவு இல்லாத என் கர்ம பலத்தை என்ன சொல்லுவேன்?

கைவல்ய ஞான நீதி நல்லோருரைக்கிலோ – நல்லவர்கள் கைவல்ய பதவியைக் கொடுக்கின்ற ஞானநீதியை பற்றி சொன்னால்

கர்மமுக் கியமென்று நாட்டுவேன் – கர்மமே முதன்மையானது என்று நிலை நாட்டுவேன்

கர்மமொருவன் நாட்டினாலோ – ஒருவன் கருமத்தை நிலைநிறுத்தினால்

பழைய ஞானமுக் கியமென்று நவிலுவேன் – முன் சொன்ன ஞானமே முதன்மையானது என்று கூறுவேன்

வடிமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் – வடமொழியிலே வல்லவனான ஒருத்தன் வந்தால்

த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் – தமிழிலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரமாக சொல்லுவேன்

வல்ல தமிழறிஞர் வரின் – ஒரு வல்லமை பெற்ற தமிழ் அறிஞர் வந்தாலோ

அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – அங்கே வடமொழியின் சிறப்பு பற்றிய வாக்கியங்கள் எடுத்துரைப்பேன்

வெல்லாம லெவரையு மருட்டிவிட வகை வந்த – நியாயமாக வெல்லாமல் எவரையும் மருளும் படி செய்ய வகை ஏற்பட்டதிற்கு காரணமான

வித்தையென் முத்திதருமோ ? – வித்தையானது எனக்கு முக்தியைக் கொடுக்குமோ?

வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற – வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும் சமமாக கருதக்கூடிய சிறந்த நிலையைப் பெற்ற

வித்தக சித்தர்கணமே! – ஞானத்தினையுடைய சித்தர் கூட்டமே!
-----------------------------------
கல்வி அறிவைத் தருமென்றும், அவ்வாறு கற்றவேண்டியவற்றை கற்றும், அக்கல்வி கூறியபடி நடக்காத கற்றவர்களைக் காட்டிலும், கல்லாத பேர்களே நல்லவர்கள் என்று பறைகிறார் தாயுமானவர்.

முக்தியைக் கொடுக்கும் ஞானமே முக்கியம் என்று ஒருவர் கூறினால், அவரிடம் கருமமே முக்கியம் என்று உரைத்தும், கருமம்தான் முக்கியமென்று சொல்பவரிடம், ஞானம்தான் பெரிது என்று விவகரித்துரைப்பேன்.

வட நாட்டு வித்தகரிடம் தமிழின் பெருமையையும், தமிழறிங்கர்களிடம் வட மொழியின் சிறப்பை எடுத்தோதுவேன்.

இவ்வாறொருவரை வெல்லாமல் மருளும்படி செய்யும் வித்தை என்ன பயனைத் தரும்? வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் சமமாக கருதும் நிலையடைந்த சித்தர் கூட்டமே!
-----------------------------------
சில சந்தேகங்கள்:

கைவல்யம் என்றால் என்ன? இது தமிழா அல்லது ஏதாவது வடமொழிச் சொல்லா?

ஒருவன் ஒன்றை பற்றி கூறும் பொழுது, மற்றதுதான் அதை விட நல்லது என்று வாதாடுவது எந்த வகையில் நல்லது?

வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த வித்தையென் முத்திதருமோ ? – இதற்கு இன்னும் நல்ல முறையில் யாரவது விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

நன்றி.

35 comments:

குமரன் (Kumaran) said...

ஆஹா. ஹரி அண்ணா. தெய்வமே வந்தாற்போல் சரியான நேரத்தில் வந்து இந்த அருமையான பாடலைச் சொன்னீர்கள். தாயுமானவர் பாடியது என்னவோ எனக்கே பாடியது போல் இருக்கிறது. பாடலைப் படிக்கும் போதே தலையை பலமுறை தட்டியது போல் உணர்ந்தேன். ஒவ்வொரு வரியும் அற்புதம்.

உங்கள் விளக்கங்களும் மிக அருமையாக இருக்கின்றன. நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் இப்படி.

குமரன் (Kumaran) said...

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்; கற்றும் அறிவில்லாத என் செய்கைகளை (கர்மத்தை) என் சொல்கேன்? என் அறிவை (மதியை) என் சொல்லுகேன்?

கைவல்ய ஞான நீதி (தன்னைத் தான் அறிந்து அதில் இன்புற்றிருப்பதுவே சிறந்தது என்ற ஞான வழி) நல்லோர் உரைக்கில் கர்மம் (செய்கைகளைச் செவ்வனே செய்தல், கர்ம யோகம்) முக்கியம் என்று நாட்டுவேன்.

கர்மம் (கர்ம யோகத்தை முக்கியமென்று) ஒருவன் நாட்டினாலோ பழைய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன்.

வட மொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே (தமிழிலே) வந்ததாய் விவகரிப்பேன். வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன்.

(என்னை நான்) வெல்லாமல் எவரையும் (எல்லாரையும்) மருட்டி விட வகை வந்த வித்தை என் (எனக்கு) முக்தி தருமோ?

வேதாந்த சிந்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தக சித்தர் கணமே.

குமரன் (Kumaran) said...

உங்கள் சந்தேகங்களுக்குப் பதில்கள்:

கைவல்யம் என்பது வடமொழிச் சொல். கேவலம் என்பதில் இருந்து வந்தது. வடமொழியில் கேவலம் என்றால் தனியானது; தனித்திருப்பது. உலக மாயைகள் எல்லாம் தீர்ந்து ஆத்ம ஞானம் பெற்று அந்த ஞான முக்தி நிலையில் ஆனந்தமாய் இருப்பது கைவல்ய முக்தி (ஜீவன் முக்தி) என்பார்கள். கைவல்யம் ஒன்றே முக்தி என்கிறது அத்வைதம். கைவல்யம் ஒரு வகை முக்தி; அதனை விட சிறந்த முக்தி வைகுண்டத்தில் என்றும் இறைவனுக்குத் தொண்டாற்றுவது என்கிறது விசிஷ்டாத்வைதமாகிய ச்ரி வைஷ்ணவம்; கைவல்யம் ஒரு வகை முக்தி; அதனை விட சிறந்தது கயிலையில் என்றும் இறைவனுக்குத் தொண்டாற்றுவது என்கிறது சைவசித்தாந்தம்.

ஒருவன் ஒன்றைப் பற்றிக் கூறும் போது மற்றது தான் அதனை விட நல்லது என்று வாதிடுவது எந்த வகையிலும் நல்லதில்லை.

வெல்லாமல் - தன்னைத் தான் வெல்லாமல், எவரையும் - எல்லாரையும், மருட்டி விட வகை வந்த வித்தை - பயமுறுத்தி, வியக்கவைக்கும் திறமையான வித்தை, என் முக்தி தருமோ? - எனக்கு முக்தி தருமோ?

G.Ragavan said...

தாயுமானவர் பாடல்கள் எளிமையாக இருக்கும். ஆனால் ஆழப் பொருள் இருக்கும். தோண்டத் தோண்டக் கிடைக்கும் கேணி என்று சொல்லலாம்.

ஆகையால் படித்து முடித்து விட்டு பொறுமையாக அலசி பின்னூட்டம் போடுகிறேன்.

கைவல்யம் என்பதற்குப் பொருளைத் தேடோ தேடு என்று தேடி விட்டேன். ஒன்றும் கிடைக்கவில்லை.

Muthu said...

கைவல்யம - கைத்திறன் ??

குமரன் (Kumaran) said...

//தியானத்தில் சமாதி நிலையில் இருப்பதையும் கைவல்யம் என்கிறார்கள்.
//

ஆமாம் மஞ்சுளா. நிர்விகல்ப சமாதி என்ற நிலையில் தனியாக முக்தி நிலைக்குச் சமமாக (சமாதி - சம + ஆதி; இறைவனுக்குச் சமமாக) இருப்பதால் அதனையும் கைவல்ய நிலைன்னு சொல்லுவாங்க.

தி. ரா. ச.(T.R.C.) said...

தியான யோக நிலையின் கடைசிப்படி கைவல்யநிலை.தி ரா. ச

இலவசக்கொத்தனார் said...

இராகவன் சொன்னா மாதிரி படிக்க படிக்க கருத்துகள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. இது எனக்குத் தோன்றியது. தப்பிருந்தால் மன்னிக்கவும்.

எவ்வளவு கற்றாலும் போதாது. கற்க வேண்டியது அதிகம் இருக்கிறது. இந்த அறிவைப் பெற்றவர்களே நல்லவர்கள். கற்றுக்கொண்டேன் என நினைக்கும் என் அறிவை என் சொல்வது?
எனக்குண்டான இந்த அறிவை வைத்து ஒரு சமயம் கடவுளுடன் ஒன்றாகக் கூடும் கைவல்ய ஞானமே பெரிது என்றும், மற்றொரு சமயம் இவ்வுலகத்தில் செய்யவேண்டிய கர்மாக்களே பெரிதென்றும் சொல்ல முடியும்.
இதைப்போலவே, மொழி மீது பற்றுக் கொண்டு தமிழ்தான் பெரிதெனவும், வட மொழிதான் பெரிதெனவும் சொல்லக் கூடிய அறிவுதான் என் கல்வி எனக்கு தந்தது. இதனால்தான், கற்றும் அறிவில்லாதவனாக இருக்கிறேன்.
இவ்வாறு இதுதான் சரியென சொல்லக்கூடிய ஒரு நிலையில்லாமல், என்னையும் மற்றவரையும் கலக்கமுறச் செய்யும் இந்தக் கல்வியா, இந்தக் கல்வியின் மூலம் வந்த அறிவா, எனக்கு முக்தியை அளிக்கப் போகிறது? வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் சமமாக கருதும் நிலையடைந்த சித்தர் கூட்டமே!

Machi said...

தாயமானவரின் ஒரு பாடலை படிக்கும் பேறு பெற்றேன்.
//வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன் ;
//
தாயுமானவர் காலத்திலேயே திராவிடம் என்ற வார்த்தை தமிழர்களை குறிக்க இருந்ததா? புது செய்தி எனக்கு.

Unknown said...

குமரன் உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. இந்த மர மண்டைலே இன்னும் ஏறமாட்டேங்குது "தன்னைத் தான் வெல்லாமல்' அப்படின்னா என்னான்னுட்டு. கொஞ்சம் சொல்லுங்களேன், ப்ளீஸ்.

Unknown said...

இராகவன், உங்களுடய பின்னோட்டத்தை எதிர் நோக்குகிறேன். தவறாமல் போடுங்க. நன்றி.

Unknown said...

மஞ்சுளா, தங்கள் வருகைக்கும் உற்சாகம் தந்தமைக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க. உங்க புகைப்படங்களெல்லாம் பாத்தேன், நல்லா இருக்குங்க.

Unknown said...

குமரன், சம+ஆதி என்ற சமாதிக்கான விளக்கம் மிக மிக அருமை. நன்றி.

Unknown said...

நன்றி கொத்தனார். உங்கள் பொழிவுரை இன்னும் கொஞசம் மெருகேற்றுகிறது இந்த தாய்மானவர் பாடலுக்கு.

Unknown said...

//தாயுமானவர் காலத்திலேயே திராவிடம் என்ற வார்த்தை தமிழர்களை குறிக்க இருந்ததா? புது செய்தி எனக்கு//

குறும்பன், எனக்கேதாவது தெரிந்தால் சொல்கிறேன். குமரன்/இராகவன் உங்களுக்கு தெரியுமா?

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். நீங்க சொல்றதும் சரி தான். ஈசாவாஸ்ய உபநிசத்துல வர்ற வாக்கியங்கள் நினைவுக்கு வருது. தெரிந்து கொண்டோம் என்று நினைப்பவர்கள் உண்மையில் தெரிந்து கொண்டவர்கள் இல்லை; (முழுவதும்) தெரிந்து கொள்ள முடியாது என்று நினைப்பவர்கள் உண்மையில் தெரிந்து கொண்டவர்கள்.

குமரன் (Kumaran) said...

குறும்பன், ஆதி சங்கரர் காலத்திலேயே திராவிடம் என்ற சொல் தமிழைக் குறித்தது. ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில் தன்னை திராவிட சிசு (தமிழ்க் குழந்தை) என்று அழைத்துக் கொள்வார்.

குமரன் (Kumaran) said...

'தன்னைத் தான் வெல்லாமல்' என்பதற்கு மத்தவங்க யாராவது விளக்கம் சொல்லட்டும் ஹரி அண்ணா.

ENNAR said...

//விராலி மலைப் பக்கம்// அதிகம் அங்கு தான் சித்தர்கள் வாழ்ந்தார்களோ?
ஏன் என்றால் எங்களிடமும் ஒரு சித்தரின் சமாது உள்ளது அவரைப்பற்றி என்னால் எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை மடமும் உண்டு.

G.Ragavan said...

ஹரி அண்ணா...கொஞ்சம் தாமதமான பின்னூட்டம்...ஆனால் யோசித்த பின்னூட்டம்.

தாயுமானவர் சொல்வது மிகச்சரி. காரணம் என்னவென்றால்...விவரம் இல்லாத பொழுது பிரச்சனையில்லை. ஆனால் கற்றவன் விவரமானவன் இல்லை. அரைகுறை விவரம் உள்ளவன். முழுதுணர்ந்த அறிஞர் மிகமிகக் குறைவு. மிகவும் அரிது.

"கற்றது கைமண்ணளவு..கல்லாதது உலகளவு..." இதைச் சொல்வது யார்? "உற்ற கலைமடந்தை ஓதுகிறாள்." கலைமாதுவே இப்படிச் சொன்னால்...நாமெல்லாம்?

நாம் கற்ற அரைகுறை ஞானம் மிகக் கொடியது. இது முதலில் தானே சரி..மற்றவர் தவறு என நினைக்க வைக்கும். அது மும்மலத்தின் முதல் படியான மாயை. இந்த மாயையில் மூழ்கினால் இரண்டாம் மலம் வரும். அதாவது கரும மலம். மாயையில் மூழ்கியன் செயல் (கருமம்) தவறாகத்தானே இருக்கும். அந்தத் தவறுகளின் அடிநாதந்தாம் ஆணவ மலம். மும்மலத்தின் உச்சகட்டம் அது.

ஆகையால்தான் நாம் கற்றது ஒன்றுமில்லை என்று அறிவதே அறிவின் தொடக்கம் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். நூறு ஏடு ஓதினேன். ஆயிரம் பாடல் பாடினேன் என்பதெல்லாம்...மாயை...அதைத்தான் தாயுமானவர் சாடுகிறார்.

அதனால்தான் தமிழ் முழுதுணர்ந்தவன் என்று ஒருவன் வருகையில்...வடமொழி பேசுகிறார். வடமொழியில் கரைகொண்ட நினைப்போடு வருகின்றவனிடம்..இங்கும் எல்லாம் இருக்கிறது..போய் வா என்கிறார். மொத்தத்தில் எவன் தன்னை மட்டுமே சரி என்கிறானோ...அவன் கற்றும் கல்லாத மூடன் என்று சொல்கிறார்.

Unknown said...

//கௌசிகன் said...
//கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்// அவர் சொல்கிற context என்னவென்று தெரியாமல் அப்படியே மொழிபெயர்த்து விளக்கம் சொல்லுதல் எனக்கு அவ்வளவு சரியாகப் படவில்லை//

எதோ நமக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். The whole idea of publishing this is to get some help from people who are experts and also, to make aware of such poems.

Please see the comment from G Raghavan.

இலவசக்கொத்தனார் said...

//அவர் சொல்கிற context என்னவென்று தெரியாமல் அப்படியே மொழிபெயர்த்து விளக்கம் சொல்லுதல் எனக்கு அவ்வளவு சரியாகப் படவில்லை.//

இல்லை கௌசிகன். இந்த பாடல்கள் எல்லாம் இருப்பதே தெரியாத என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு, ஹரிஹரன்ஸ் தருவது, இதுதான்யா பாட்டு, இதுதான் இதன் அர்த்தம். நீ என்ன நினைக்கிறாய் என்பது போல் இருக்கிறது. குமரனும், ஜிராவும், அதன் வேறு பரிமாணங்களைப் பற்றி சொல்லும் போது இப்படி எல்லாம் இருக்கிறதா என ஆச்சரியமாய் இருக்கிறது. எப்பொழுதாவது ஒரு கருத்து தோன்றினால் அதை சொல்லவும் முடிகிறது.

அதனல் இதில் சரி தவறு என்று இருப்பதாகப் படவில்லை. வலைப்பூக்களின் ஆதாரமே நமக்குத் தோன்றுவதை சொல்வதற்குத்தானே.

ஜெயஸ்ரீ said...

அந்த காலத்தில் பல பண்டிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்குள் எப்போதும் வாத விவாதங்கள் நடக்கும். சில சமயங்களில் துறவிகளும் இதில் ஈடுபடுவர் .வாதத்தில் அவர் இவரை வென்றார், இவர் அவரை வென்றார் என்று ஒரே போட்டிதான். சில சமயங்களில் அவை அர்த்தமுள்ள வாதங்களாகவும், பல சமயங்களில் வார்த்தை ஜாலங்களாகவும் அவை இருந்தன (ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படித்திருந்தால் இது எளிதில் விளங்கும்) . பண்டிதர்களுக்கிடையே பலத்த போட்டி, பொறாமை நிலவியதுண்டு. சோகம் என்னவென்றால் இவர்களில் பலரும் மெய்ப்பொருளை அடைய முயற்சி கூட செய்யவில்லை என்பதே.

முக்தியை அடைவதற்கு 4 வழிகள் உண்டு. ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம். இவை நாலிலுமே பல நிலைகள் உண்டு. எவராவது ஞான யோகம் பெரிது என்று சொன்னால் அதன் நிறை குறைகளை அலசாமல், அவரை மிரட்ட கர்ம யோகம் பெரியது என்று மற்றவர் வாதிடுவார். இவை நான்கு வழிகளுமே சென்று சேருமிடம் ஒன்றுதான். தான்
தேர்ந்தெடுத்துக்கொண்ட மார்க்கத்தை மனவுறுதியுடன் விடாமல் பின்பற்றி முக்தியடையவேண்டுமேயன்றி, வெட்டி வாதத்தால் ஆவது என்ன?

கர்மயோகத்தைப் பின்பற்றுபவன் தனக்கு விதிக்கப்பட்ட கடமையை பலனில் நாட்டாமில்லது, நடுநிலமையுடன், அசைவறு மதியோடு செய்ய வேண்டும். அதேபோல் ராஜ யோகத்தில் (ராஜ யோகம் என்பது தியானத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி படிப்படியாக கைவல்ய நிலைக்கு செல்வது) யாம,நியமா, ஆசனா உள்ளிட்ட 8 நிலைகள் உண்டு. முறையான இடைவிடாத பயிற்சியின் மூலமே ஒவ்வொரு நிலையாகக் கடக்க முடியும். இதை விட்டுவிட்டு, ராஜ யோகத்தைப் பற்றி வெறுமே கதைப்பதால் ராஜயோகி ஆக முடியுமா?

உதாரணத்துக்கு ஒருவன் சிற்ப சாஸ்திரத்தில் புத்தகங்களைப் படித்து, கரைத்து குடித்து எல்லோரிடமும் அதை பற்றி மணிக்கணக்காக பேசலாம். சுதை சிற்பம் என்றும் குகைக்கோயில் என்றும் ஆகமங்கள் என்றும், கதைத்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் உளியைக் கையில் எடுத்து சிற்பக்கலையை செயல்முறையில் பயிலாதவரை அவன் சிற்பி ஆகமாட்டான். அவன் தன் கலையில் முழுமை அடைவதற்கு ஒரு தலைசிறந்த சிற்பி ஆவதற்கு எவ்வளவு உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி தேவை, சிறிது சிறிதாக மெருகேறி அவன் திறமை முழுமையடையப் பல வருடங்கள் ஆகும்.

அடுத்தவரை வெருட்டி வார்த்தை ஜாலங்கள் காட்டாது, பேசப்படும் பொருளை நேர்மையாக விவாதித்து உண்மை தெளியவேண்டும். அவ்வாறு தெளிந்து தான் தேர்ந்தெடுத்த மார்க்கத்தை உறுதியாகப் பின்பற்றவேண்டும். இல்லையெனில் அந்த கல்வியால் என்ன பயன்? இந்த வாத விவாதங்கள் முக்தியைத் தருமா?

அடுத்ததாகத் தன்னை வெல்வது. தன்னை வென்றவன் உலகத்தை வென்றவனாவன். தன்னை வெல்வது என்பது
"விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் , நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்"

என்று பாரதி வேண்டியதைப்போல் புலன்கள் (உடல் )சென்ற வழியே மனம் செல்லாமல் மனம் சென்ற வழி உடல் செல்வது.
ரொம்ப எளிமையாகச்சொல்லப்போனால் காலையில் ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கும்போது எழுந்து பரிட்சைக்கு படி என்று மனம் சொல்லும், இழுத்து போர்த்தி தூங்கு என்று உடல் சொல்லும், கடைசியில் வெல்வது மனமா, உடலா ?
மனம் வென்றால் - இது மிகச் சிறிய அளவில் ஒரு self-victory.
நம் வாழ்வில் வெற்றியடைய இது மிக மிகத் தேவை. அதற்கு மன உறுதி மிகமிக அவசியம். அது உள்ளவர்களுக்கு வானம் வசப்படும்.
அதைவிடப் பன்மடங்கு இறைவனை அடைவதற்குத் தேவை.
அடுத்ததாக அச்சம், மாயை, ஆணவம், காமம், பொறாமை, பேராசை , கோபம் போன்ற நமது மனத்திலுள்ள எதிரிகளை வெல்வது. அருணகிரியாரும், அப்பரும், சுந்தரரும், சம்பந்தரும், மாணிக்கவாசகரும் ஆழ்வார்களும் எல்லாரும் இறைவனிடம் வேண்டுவது இதைத்தான். தீய குணங்களை வெற்றி கொண்டு, அதற்கெல்லாம் மேலாக தான் என்ற அகந்தையை ஒழித்து மதி மயங்காது இருப்பதே தன்னை வெல்வது.எந்தவித சபலங்களுக்கும் (temptation) ஆளாகாமல் இருப்பது

தன்னை வென்று, ஆணவம், கன்மம் முதலிய திரைகளை அகற்றியவருக்கே முக்தியடைவது சாத்தியம். இதைத்தான் சொல்ல வருகிறார் என நினைக்கிறேன் . இந்த contextல் தான் 'கல்லாதவர்தான் நல்லவர்' என்று சொல்கிறார்..

G.Ragavan said...

////கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்// அவர் சொல்கிற context என்னவென்று தெரியாமல் அப்படியே மொழிபெயர்த்து விளக்கம் சொல்லுதல் எனக்கு அவ்வளவு சரியாகப் படவில்லை. //

கௌசிகன், ஒரு பழைய பாட்டு உண்டு.

என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது...

இதுபோல படிக்காதவங்கதான் நல்லவங்கன்னு தலைப்பு.

அடுத்து அரைகுறையாப் படிக்காதவங்க நல்லவங்க.

அடுத்து அரைகுறையாப் படிச்சிட்டு படம் காட்டாதவங்கதான் நல்லவங்க...

இதத்தனையும் ஹரி விளக்கி...குமரனும் விளக்கி...நானும் சொல்லியிருக்கேன். எல்லாம் சரியாச் சொன்ன மாதிரிதான் இருக்கு எனக்கு.

ஜெயஸ்ரீ said...

அந்த காலத்தில் வேதங்கலையும், உபநிஷதங்களையும் மற்றும் பல தத்துவங்களையும் கற்றறிந்த பல பண்டிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்குள் எப்போதும் வாத விவாதங்கள் நடக்கும். சில சமயங்களில் துறவிகளும் இதில் ஈடுபடுவர் .வாதத்தில் அவர் இவரை வென்றார், இவர் அவரை வென்றார் என்று ஒரே போட்டிதான். சில சமயங்களில் அவை அர்த்தமுள்ள வாதங்களாகவும், பல சமயங்களில் வார்த்தை ஜாலங்களாகவும் அவை இருந்தன (ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படித்திருந்தால் இது எளிதில் விளங்கும்) . பண்டிதர்களுக்கிடையே பலத்த போட்டி, பொறாமை நிலவியதுண்டு. சோகம் என்னவென்றால் இவர்களில் பலரும் மெய்ப்பொருளை அடைய முயற்சி கூட செய்யவில்லை என்பதே.

முக்தியை அடைவதற்கு 4 வழிகள் உண்டு. ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம். இவை நாலிலுமே பல நிலைகள் உண்டு. எவராவது ஞான யோகம் பெரிது என்று சொன்னால் அதன் நிறை குறைகளை அலசாமல், அவரை மிரட்ட கர்ம யோகம் பெரியது என்று மற்றவர் வாதிடுவார். இவை நான்கு வழிகளுமே சென்று சேருமிடம் ஒன்றுதான். தான்
தேர்ந்தெடுத்துக்கொண்ட மார்க்கத்தை மனவுறுதியுடன் விடாமல் பின்பற்றி முக்தியடையவேண்டுமேயன்றி, வெட்டி வாதத்தால் ஆவது என்ன?

கர்மயோகத்தைப் பின்பற்றுபவன் தனக்கு விதிக்கப்பட்ட கடமையை பலனில் நாட்டாமில்லது, நடுநிலமையுடன், அசைவறு மதியோடு செய்ய வேண்டும். அதேபோல் ராஜ யோகத்தில் (ராஜ யோகம் என்பது தியானத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி படிப்படியாக கைவல்ய நிலைக்கு செல்வது) யாம,நியமா, ஆசனா உள்ளிட்ட 8 நிலைகள் உண்டு. முறையான இடைவிடாத பயிற்சியின் மூலமே ஒவ்வொரு நிலையாகக் கடக்க முடியும். இதை விட்டுவிட்டு, ராஜ யோகத்தைப் பற்றி வெறுமே கதைப்பதால் ராஜயோகி ஆக முடியுமா?

உதாரணத்துக்கு ஒருவன் சிற்ப சாஸ்திரத்தில் புத்தகங்களைப் படித்து, கரைத்து குடித்து எல்லோரிடமும் அதை பற்றி மணிக்கணக்காக பேசலாம். சுதை சிற்பம் என்றும் குகைக்கோயில் என்றும் ஆகமங்கள் என்றும், கதைத்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் உளியைக் கையில் எடுத்து சிற்பக்கலையை செயல்முறையில் பயிலாதவரை அவன் சிற்பி ஆகமாட்டான். அவன் தன் கலையில் முழுமை அடைவதற்கு ஒரு தலைசிறந்த சிற்பி ஆவதற்கு எவ்வளவு உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி தேவை, சிறிது சிறிதாக மெருகேறி அவன் திறமை முழுமையடையப் பல வருடங்கள் ஆகும்.

அடுத்தவரை வெருட்டி வார்த்தை ஜாலங்கள் காட்டாது, பேசப்படும் பொருளை நேர்மையாக விவாதித்து உண்மை தெளியவேண்டும். அவ்வாறு தெளிந்து தான் தேர்ந்தெடுத்த மார்க்கத்தை உறுதியாகப் பின்பற்றவேண்டும். இல்லையெனில் அந்த கல்வியால் என்ன பயன்? இந்த வாத விவாதங்கள் முக்தியைத் தருமா?

அடுத்ததாகத் தன்னை வெல்வது. தன்னை வென்றவன் உலகத்தை வென்றவனாவன். தன்னை வெல்வது என்பது
"விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் , நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்"

என்று பாரதி வேண்டியதைப்போல் புலன்கள் (உடல் )சென்ற வழியே மனம் செல்லாமல் மனம் சென்ற வழி உடல் செல்வது.
ரொம்ப எளிமையாகச்சொல்லப்போனால் காலையில் ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கும்போது எழுந்து பரிட்சைக்கு படி என்று மனம் சொல்லும், இழுத்து போர்த்தி தூங்கு என்று உடல் சொல்லும், கடைசியில் வெல்வது மனமா, உடலா ?
மனம் வென்றால் - இது மிகச் சிறிய அளவில் ஒரு self victory.
நம் வாழ்வில் வெற்றியடைய இது மிக மிகத் தேவை. அதற்கு மன உறுதி மிகமிக அவசியம். அது உள்ளவர்களுக்கு வானம் வசப்படும்.
அதைவிடப் பன்மடங்கு இறைவனை அடைவதற்குத் தேவை.
அடுத்ததாக அச்சம், மாயை, ஆணவம், காமம், பொறாமை, பேராசை , கோபம் போன்ற நமது மனத்திலுள்ள எதிரிகளை வெல்வது. அருணகிரியாரும், அப்பரும், சுந்தரரும், சம்பந்தரும், மாணிக்கவாசகரும் ஆழ்வார்களும் எல்லாரும் இறைவனிடம் வேண்டுவது இதைத்தான். தீய குணங்களை வெற்றி கொண்டு, அதற்கெல்லாம் மேலாக தான் என்ற அகந்தையை ஒழித்து மதி மயங்காது இருப்பதே தன்னை வெல்வது.எந்தவித சபலங்களுக்கும் (temptation) ஆளாகாமல் இருப்பது

ஜெயஸ்ரீ said...

அந்த காலத்தில் வேதங்களையும், உபநிஷதங்களையும் மற்றும் பல தத்துவங்களையும் நன்கு கற்றறிந்த பல பண்டிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்குள் எப்போதும் வாத விவாதங்கள் நடக்கும். சில சமயங்களில் துறவிகளும் இதில் ஈடுபடுவர் .வாதத்தில் அவர் இவரை வென்றார், இவர் அவரை வென்றார் என்று ஒரே போட்டிதான். சில சமயங்களில் அவை அர்த்தமுள்ள தங்களாகவும், பல சமயங்களில் வார்த்தை ஜாலங்களாகவும் அவை இருந்தன (ஜெயமோகனின் விஷ்ணுபுரம் படித்திருந்தால் இது எளிதில் விளங்கும்) . பண்டிதர்களுக்கிடையே பலத்த போட்டி, பொறாமை நிலவியதுண்டு. சோகம் என்னவென்றால் இவர்களில் பலரும் மெய்ப்பொருளை அடைய முயற்சி கூட செய்யவில்லை என்பதே.

முக்தியை அடைவதற்கு 4 வழிகள் உண்டு. ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம், ராஜ யோகம். இவை நாலிலுமே பல நிலைகள் உண்டு. எவராவது ஞான யோகம் பெரிது என்று சொன்னால் அதன் நிறை குறைகளை அலசாமல், அவரை மிரட்ட கர்ம யோகம் பெரியது என்று மற்றவர் வாதிடுவார். இவை நான்கு வழிகளுமே சென்று சேருமிடம் ஒன்றுதான். தான்
தேர்ந்தெடுத்துக்கொண்ட மார்க்கத்தை மனவுறுதியுடன் விடாமல் பின்பற்றி முக்தியடையவேண்டுமேயன்றி, வெட்டி வாதத்தால் ஆவது என்ன?

continued

ஜெயஸ்ரீ said...

கர்மயோகத்தைப் பின்பற்றுபவன் தனக்கு விதிக்கப்பட்ட கடமையை பலனில் நாட்டாமில்லது, நடுநிலமையுடன், அசைவறு மதியோடு செய்ய வேண்டும். அதேபோல் ராஜ யோகத்தில் (ராஜ யோகம் என்பது தியானத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தி படிப்படியாக கைவல்ய நிலைக்கு செல்வது) யாம,நியமா, ஆசனா உள்ளிட்ட 8 நிலைகள் உண்டு. முறையான இடைவிடாத பயிற்சியின் மூலமே ஒவ்வொரு நிலையாகக் கடக்க முடியும். இதை விட்டுவிட்டு, ராஜ யோகத்தைப் பற்றி வெறுமே கதைப்பதால் ராஜயோகி ஆக முடியுமா?

உதாரணத்துக்கு ஒருவன் சிற்ப சாஸ்திரத்தில் புத்தகங்களைப் படித்து, கரைத்து குடித்து எல்லோரிடமும் அதை பற்றி மணிக்கணக்காக பேசலாம். சுதை சிற்பம் என்றும் குகைக்கோயில் என்றும் ஆகமங்கள் என்றும், கதைத்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் உளியைக் கையில் எடுத்து சிற்பக்கலையை செயல்முறையில் பயிலாதவரை அவன் சிற்பி ஆகமாட்டான். அவன் தன் கலையில் முழுமை அடைவதற்கு ஒரு தலைசிறந்த சிற்பி ஆவதற்கு எவ்வளவு உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி தேவை, சிறிது சிறிதாக மெருகேறி அவன் திறமை முழுமையடையப் பல வருடங்கள் ஆகும்.

அடுத்தவரை வெருட்டி வார்த்தை ஜாலங்கள் காட்டாது, பேசப்படும் பொருளை நேர்மையாக விவாதித்து உண்மை தெளியவேண்டும். அவ்வாறு தெளிந்து தான் தேர்ந்தெடுத்த மார்க்கத்தை உறுதியாகப் பின்பற்றவேண்டும். இல்லையெனில் அந்த கல்வியால் என்ன பயன்? இந்த வாத விவாதங்கள் முக்தியைத் தருமா?

ஜெயஸ்ரீ said...

அடுத்ததாகத் தன்னை வெல்வது. தன்னை வென்றவன் உலகத்தை வென்றவனாவன். தன்னை வெல்வது என்பது
"விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் , நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்"

என்று பாரதி வேண்டியதைப்போல் புலன்கள் (உடல் )சென்ற வழியே மனம் செல்லாமல் மனம் சென்ற வழி உடல் செல்வது.
ரொம்ப எளிமையாகச்சொல்லப்போனால் காலையில் ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கும்போது எழுந்து பரிட்சைக்கு படி என்று மனம் சொல்லும், இழுத்து போர்த்தி தூங்கு என்று உடல் சொல்லும், கடைசியில் வெல்வது மனமா, உடலா ?
மனம் வென்றால் - இது மிகச் சிறிய அளவில் ஒரு self victory.
நம் வாழ்வில் வெற்றியடைய இது மிக மிகத் தேவை. அதற்கு மன உறுதி மிகமிக அவசியம். அது உள்ளவர்களுக்கு வானம் வசப்படும்.
அதைவிடப் பன்மடங்கு இறைவனை அடைவதற்குத் தேவை.
அடுத்ததாக அச்சம், மாயை, ஆணவம், காமம், பொறாமை, பேராசை , கோபம் போன்ற நமது மனத்திலுள்ள எதிரிகளை வெல்வது. அருணகிரியாரும், அப்பரும், சுந்தரரும், சம்பந்தரும், மாணிக்கவாசகரும் ஆழ்வார்களும் எல்லாரும் இறைவனிடம் வேண்டுவது இதைத்தான். தீய குணங்களை வெற்றி கொண்டு, அதற்கெல்லாம் மேலாக தான் என்ற அகந்தையை ஒழித்து மதி மயங்காது இருப்பதே தன்னை வெல்வது.எந்தவித சபலங்களுக்கும் (temptation) ஆளாகாமல் இருப்பது

ஜெயஸ்ரீ said...

இவ்வறு மனதில் எழும் காம, கன்மம்,மாயை முதலிய பகைவர்களை ஒழித்து, தான் எனும் அகந்தையை நீக்கி, தான் கற்ற மார்க்கத்தை பின்பற்றி மெய்ப்பொருளை அடைய இடையறாது முயல்பவனுக்கே முக்தி கிடைக்கும்.

இந்த மார்ககம் சிறந்தது, அது இதைவிட மேல் என்று வாத விவாதம் மட்டுமே செய்பவர்களைக் கண்டு, இவர்களைவிட கல்லாதவனே மேலானவன் என்று சொல்கிறார் என்பது என் கருத்து.
(Ignorance is bliss

குமரன் (Kumaran) said...

கலக்கல் விளக்கம் ஜெயச்ரி. ரொம்ப எளிமையாகத் தகுந்த எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கியுள்ளீர்கள். ஜெயச்ரியோட விளக்கத்தைப் படித்துவிட்டு என் முதல் பின்னூட்டத்தைப் படித்துப் பாருங்கள். :-)

இலவசக்கொத்தனார் said...

நல்ல விரிவான விளக்கம் ஜெயஸ்ரீ.

ஜெயஸ்ரீ said...

குமரன், கொத்ஸ்

நன்றி

rv said...

அருமையான பாடல் ஹரி அண்ணா. நீங்கள் மூவரும் சொன்ன பொருளும் அருமை.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்

அவனை விட்டுவிட்டு வெறும் ஈகோவிற்காக வெத்துச்சண்டைப் போடுவதற்கு பதில், கல்லாதவனாகவே இருந்துவிட்டு போகலாம் என்று நச்சென்று சொல்லியிருக்கிறார்.

--
ஜெயஸ்ரீ,
நீங்க என்னிக்கு பதிவு ஆரமிக்க போறீங்கன்னு முதல்ல ஒரு தேதி சொல்லுங்க.

நன்மனம் said...

Arumai, veru ondrum solla yaan ariyen paraparame: Sridhar

VSK said...

எல்லாருடைய விளக்கங்களும் அருமையோ அருமை!
இருப்பினும், எனக்கென்னவோ, அந்த கடைசி அடிகள்தான் இப்புதிருக்கு விடையோ எனத் தோன்றுகிறது!

'வேதாந்தத்தைக் கற்று, சித்தாந்ததை உணர்ந்து, இரண்டும் ஒன்றே எனும் சமரச நன்னிலை பெற்று வித்தகர்களாக விளங்குகின்ற சித்தர் கூட்டமே, உங்களையெல்லாம் கண்ட பின்னர் கல்லாத பேர்களே நலலவர்கள் என நான் உணர்ந்து கொண்டேன்',

எனத் தாயுமானவர் அரற்றுவது போலக் கேட்கிறது!