Wednesday, March 08, 2006

இருசக்கர புவி ஊர்தி வண்டி - ஓட்ட பயிலல்

அக்கம் பக்கம் பாக்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே
ஹாண்டில் பாரை ஒடிக்காதே

நீதிக்குப் பின் பாசம்ன்னு நினைக்கிறேன்....எம்ஜியார் சரோஜாதேவிக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுப்பார். ( சைக்கிளை இருசக்கர புவி ஊர்தி வண்டின்னு பெரியவங்க சொன்னாலும் நம்ம சைக்கிள்ன்னே வைச்சுப்போம், கீ போர்ட்லே அடிக்க சுளுவா இருக்கே!). பாட்டு முடியறதுக்குள்ளே, அம்மா சும்மா ஜில்லுன்னு சைக்கிளோட்ட ஆரம்பிச்சுடுவாங்க...

இவ்வளவு ஈஸியா நிஜ வாழ்க்கையிலுமிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்.

ஆறாப்பு படிக்கையிலே மொதமொதலா சைக்கிள் கத்துகிற ஒரு பாக்யம் கிடைத்தது. எட்டாப்பு 'ஸி' செக்ஷ்ன்லே படிக்கிற கனகராஜ் தானாவே வந்து எனக்கு சொல்லிதாரேன்னாம்லே. எவ்வளவு நல்ல மனசு அவனுக்கு, தங்கமான் புள்ளே. டவுண்லேயுள்ள சினிமா கொட்டாகார அய்யா அவன் அம்மாவை வெச்சியிருக்காறுன்னு தெருலே எல்லாரும் பேசிப்பாக. வாரம் இரண்டு மூணு நாள் சாயங்காலமா பிளஷர் கார்லே வருவாரு, ராவோட ராவா கிளம்பிப் போயிடுவாரரு. யாரு எப்படி இருந்தா என்ன, நமக்குதான் கனகராஜ் இருக்கான்லே சைக்கிளோட்ட சொல்லிக் கொடுக்க.

அய்யனார் சைக்கிள் நிலையம்ன்னு சுண்ணாம்பாலே எழுதின போர்டு இருக்கும் அந்த சைக்கிள் வாடகைக்கு தரும் கடைலே. "நிலையம்"லே உள்ள அந்த "லை", எம்ஜியார் கொண்டு வந்த சீர்திருத்ததிற்கு முன்னாலே உள்ள "லை". வயத்துலே கட்டி வந்த பாம்பு ஒன்னு படமெடுத்து ஆடற மாதிரி இருக்குமே, அந்த "லை". ஒரு மணி நேர வாடகை பண்ணன்டு பைசா. நம்மெல்லாம் போய் கேட்டா தரமாட்டார் அந்த கடைக்காரர். க்யாரண்டி கொடுக்க ஆளு இருக்காம்பார், மாரிமுத்துங்ற அந்த கடைச் சொந்தக்காரர். கனகராஜ் போனா அதெல்லாம் கேக்கமாட்டார். பெரிய எடமாச்சே.

நம்மட்ட இருந்து நாலணா வாங்கிட்டு பத்தே நிமிஷத்தில், சும்மா ஜம்முன்னு ஒரு சைக்கிளை ஓட்டிகினு வருவான், கனகராஜ். அவன் குரங்கு பெடல் போட்டு சைக்கிளே ஓட்டிக்கினு வர அழகே தனி.

தட்டாக்குடித் தெருலே ராமச்சந்திரய்யர் வீட்டுக்குப் பக்கத்திலே, கோணாமாணா முட்டை வடிவத்திலே ஒரு பெரிய கல் இருக்கும். அதிலே காலை வச்சு, சைக்கிள் மேல ஏறணம். இந்த சைடிலே ரெண்டு பசங்க, அந்த பக்கம் ரெண்டு, ஒரு தள்ளு தள்ளுவாங்க. நேராகவே போவாது வண்டி, நல்லா குடிச்சவன் நடக்கிற மாதிரி சும்மா லொளக்கு லொளக்குன்னு ரெண்டு பக்கமும் விழும். கூடவே பசங்களோட குத்தும் விழும். முதல் ஒரு வாரம் முழுக்க இதேதான் கதை.

அந்த வாரம் ஃபுல்லா சைக்கிளோட்டற சொப்பனம்தான். ஒரு கைய்ய விட்டு ஒட்டறது, ரெண்டு கைய்ய விட்டு ஓட்டறது, கொரங்கு பெடல் போடறது, டபுள்ஸ் போறது இத்யாதி இத்யாதி. ஏன், கனவுலே நானே சைக்கிளோட்ட கூட சொல்லிக் கொடுத்திறுக்கேம்ல...

கொஞ்சம் கொஞ்சமா அந்த பேலன்ஸ் பண்ற பக்குவம் வந்து தனியே சைக்கிள் ஒட்டறதுக்குள்ளே ஒரு மாசம் பறந்து ஓடி போயிட்டு. எனக்கு கத்துக் கொடுத்த கனகராஜுக்கு ஃபீஸ் என்னான்னா, ஒவ்வொரு தடவையும் பதினைந்து நிமிஷம் அவனுக்குன்னு தனியே ஓட்ட கொடுக்கணும், அவ்வளவுதான். அதுக்கு அப்புறம் நான் சைக்கிள் ஒட்ட சொல்லிக் கொடுத்தவங்க லிஸ்ட் ரொம்ப பெரிசு.

வழிவழியா வந்த இந்த ஓட்டக் கத்துக் கொடுக்கும் கலை இப்போ இருக்குதாங்க?

21 comments:

இலவசக்கொத்தனார் said...

யப்பா,
பேருலேர்ந்து எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க. நெசமாலுமா, இல்ல உங்க காலத்து மனுசங்க யாரும் இல்லைன்னு, உடாலங்கிடி வேலையா?

இப்போ எல்லாம் இந்த வேலையெல்லாம் இல்லீங்கோ. ஸைடுல ரெண்டு சின்ன சக்கரம் பேலன்ஸுக்காக வருது, பையன் அவனே ஏறி ஓட்டிகிடணும். பேலன்ஸ் வர வர ஒவ்வொண்ணா, இந்த சின்ன சக்கரத்தை கழட்டி விடணும். அவ்வளவுதான்.

நீங்க சொல்லறா மாதிரி சுகம் வருமா? என்னவோ போங்க. ஆனா கட்டாயம் எம்பையன் இந்த மாதிரி எழுத மாட்டான். அவனுக்கு இவ்வளவு சுவாரசியமா எதுவும் இல்லையே.

புகழேந்தி said...

//சைக்கிளை இருசக்கர புவி ஊர்தி வண்டின்னு பெரியவங்க சொன்னாலும் நம்ம சைக்கிள்ன்னே வைச்சுப்போம், கீ போர்ட்லே அடிக்க சுளுவா இருக்கே!//

ஈருருளி என்று சொல்லலாமே

Unknown said...

கிட்டத்தட்ட எல்லாமே சரிதான்...அந்த வாடகை சைக்கிள் கடை பேருதான் கொஞ்சம் மறந்து போச்சு. மத்ததெல்லாம் சரிதான், டவுண் சினிமாக்காரர் சமாசாரம் உட்பட... ;-)

கைப்புள்ள said...

அடடா பெரியவரே!
மலரும் நினைவுகளைக் கிளறி விட்டீங்களே! சின்ன வயசுல நமக்குச் சொல்லி குடுக்க ஹவர் சைக்கிள் எடுத்து கத்துக் குடுக்க வந்தவங்க ஓட்டனது தான் அதிகம். சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டது பத்தாப்பு லீவுல ஊருக்குப் போயிருந்த போது தான். கத்துக் குடுத்தவரு 'இடுப்பை ஒடிக்காதண்ணே'னு இடுப்புலியே ரெண்டு சுள்ளுன்னு வச்சாரு...அப்புறம் ரெண்டு தடவை தார் ரோட்டுல சில்லறை வாருனதுக்கப்புறம் சைக்கிள் ஓட்ட வந்துடுச்சு. மத்தபடி குரங்கு பெடல் ஆனந்தத்தையெல்லாம் நான் அனுபவிக்கலை.

Unknown said...

//ஈருருளி என்று சொல்லலாமே //

சொல்லலாம்தான்...ஏதோ பாத்திரம் பெயர் மாதிரியில்லே? உருளி, குண்டான்-ங்கிற் மாதிரி

Unknown said...

கைப்புள்ளே, அங்கேயும் அதே கதைதானா? வீட்டுக்கு வீடு வாசப்படி..இந்தக் காலத்து பசங்க இதமாதிரி சுகானுபவங்களை மிஸ் பண்ணறாங்களே!

இலவசக்கொத்தனார் said...

கைப்பு,
பெருசுக்கும் உங்களிக்கும் ஒரே வயசாய்யா? இப்படி மலரும் நினைவுகள போட்டு தாக்கறீங்க.
ஹிஹி

கைப்புள்ள said...

பெரியவரே!
நேத்து ப்ளேன், இன்னிக்கு சைக்கிள்...நாளைக்கு நடராஜாவா?

கைப்புள்ள said...

//கைப்பு,
பெருசுக்கும் உங்களிக்கும் ஒரே வயசாய்யா? இப்படி மலரும் நினைவுகள போட்டு தாக்கறீங்க.
ஹிஹி//

கொளுத்து உம்ம குசும்பு சாஸ்தியாயிட்டே போவுது வர வர...எனக்கு என்னிக்கி சாமி வரப் போவுதுன்னு தெரியல்ல
:)-

இலவசக்கொத்தனார் said...

சாமி வருமா?

கைப்புசாமின்னு பேரப் போட்டு உங்களை பிரேமாநந்தா, சதுர்வேதி லெவலுக்கு கொண்டு போயிடுவோம். என்ன சொல்லாறீங்க?

பினாத்தல் சுரேஷ் said...

யா யா, எனக்கு ஏரோப்ளேன் ஒட்டும்போதும் கிட்டத்தட்ட இதே ஃபீலிங் தான் வந்தது! (எங்க வயசுலே எல்லாம் சைக்கிள் அவுட்-டேட் ஆயிடிச்சில்ல)

Unknown said...

// சுரேஷ் (penathal Suresh) said...
யா யா, எனக்கு ஏரோப்ளேன் ஒட்டும்போதும் கிட்டத்தட்ட இதே ஃபீலிங் தான் வந்தது! (எங்க வயசுலே எல்லாம் சைக்கிள் அவுட்-டேட் ஆயிடிச்சில்ல) //

எது?, இந்த எக்சிபிஷன்லே மரத்தாலே பண்ணி கையாலே சுத்திக்கிட்டு இருப்பாங்களே, அந்த ஏரோப்ளேன ஓட்டும் போதா?... :-)

மணியன் said...

நான் முதலில் ஓட்டிய சைக்கிளில் (மூவுருளி) மூன்று சக்கரம் இருந்ததே ;நானேதான் ஓட்டக் கத்துக்கிட்டேனே :))

குமரன் (Kumaran) said...

ஹரி அண்ணா. நிஜமாவே உங்களுக்கு எல்லாமே நினைவில இருக்கா? ஆச்சரியம் தான். என்னை எழுதச் சொன்னா முழிமுழின்னு முழிப்பேன். :-)

மணியன் சார். நான் மொதொ மொதல்ல ஓட்டுன சைக்கிள்லயும் மூனு சக்கரம் இருந்துச்சு. உங்களை மாதிரியே நானே ஓட்டக் கத்துக்கிட்டேன். இப்ப என் பொண்ணும் அப்படித் தான். தானே ஓட்டு ஓட்டுன்னு ஓட்டறா...சைக்கிளைத்தான். என்னை இல்லை. :-)

சிவா said...

சைக்கிள் நினைவுகள் அருமை..பண்ணிரெண்டு பைசாவா..அப்போ ரொம்ப முன்னாடி..அப்படியே நியாபகம் வச்சிருக்கீங்களே ஐயா :-)

Unknown said...

// சிவா said...
சைக்கிள் நினைவுகள் அருமை..பண்ணிரெண்டு பைசாவா..அப்போ ரொம்ப முன்னாடி..அப்படியே நியாபகம் வச்சிருக்கீங்களே ஐயா :-) //

சில விஷயங்கள் எப்பவுமே பசுமையாக இருக்கும். ஒரு ஹவருக்கு 12 பைசாங்கிறதை மாரிமுத்து எப்பவுமே ரெண்டனான்னுதான் சொல்லுவாரு...பைசா வந்து அணா போய் ரொம்ப நாளக்கும் கூட...

Unknown said...

//என் மாமா தான் சைக்கிள் குரு. பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால் ஆளே இருக்க மாட்டார். //

ஆமாம், மஞ்சுளா, இந்த ஏமாத்து விஷயம் நம்ம எல்லாருக்குமே நடந்திருக்குமென நினைக்கிறேன். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

Unknown said...

// குமரன் (Kumaran) said...
ஹரி அண்ணா. நிஜமாவே உங்களுக்கு எல்லாமே நினைவில இருக்கா? ஆச்சரியம் தான். என்னை எழுதச் சொன்னா முழிமுழின்னு முழிப்பேன். :-)//

குமரன், போன வாரம் நடந்தது இன்னானு கேளுங்க, முழிப்பேன், சில பழய விஷயங்கள் நல்லாவே ஞாபகமிருக்கு.

Unknown said...

சிவா சைக்கிள் கடைலே வேல பாத்ததைப் பத்தி நல்லா எழுதியிருக்காரு. படிச்சுத்தான் பாருங்களேன்...
http://sivapuraanam.blogspot.com/2006/03/2_03.html

சிவா, நீங்களும் கொரங்கு பெடல் ஆளா, வாங்க வாங்க...

தருமி said...

ஒரு மணி நேர வாடகை பண்ணன்டு பைசா"//- ஏங்க ஹரிகரன், உங்க வயசு என்ன?
Occupation என்னன்னு பார்க்கலேமேன்னு profile போனா, டெக்னிக்கலா மாடு மேய்க்கிறது, அதும் தள்ளி உள்ள ஊர்ல, அப்டின்னு இருக்குது. சரியான் mysteru man-ஆ இருப்பீங்க போல.

"போன வாரம் நடந்தது இன்னானு கேளுங்க, முழிப்பேன், சில பழய விஷயங்கள் நல்லாவே ஞாபகமிருக்கு"// ரொம்ப ரொம்ப சரிங்க...ஒருமாதிரி நம்ம வயசு மட்டத்துக்கு நெருங்குறீங்களே...

Unknown said...

தருமி ஸார், ரொம்ப நன்றிங்க. ஏற்கனவே நம்மளை பெரியவர்ன்னு ஒரு மாதிரி எல்லாரும் பாக்காங்க. வயசெல்லாம் சொன்ன அவ்வளவுதான் ஒத்தனும் சீண்ட மாட்டாங்க...இங்கே வேணாங்க, தனியே வெச்சுக்கலாமே...சரியா?