Wednesday, March 22, 2006

கச்சேரிக்கு கூட்டமும், காணாமல் போன எஸ்.என்.ஜெ.வும்


எனது நண்பர் எஸ்.என்.ஜெ. ஒரு கர்நாடக இசை வல்லுநர். (ஆமாம், இவங்க எல்லாருமே மூணு எழுத்துல ஒரு பேர் வச்சுக்கராங்களே. அது ஏன்?) அவரிடம் பேசும்போது அடிக்கடி அவர் வருத்தப்படுவது கச்சேரிகளுக்கு இளைஞர்கள் வருவதேயில்லை, சரியான கூட்டம் இருப்பதில்லை என்பதுதான். நம்மைப் பற்றி தெரிந்தும் இப்படி சொல்லலாமோ? எடுத்துவிட்டேன் கூட்டம் சேர்க்கும் வழிகளை. இதோ வரேன்னு சொல்லிட்டு போனவர்தான். ஆளையே காணும். அப்படி என்னதான்யா சொன்னே என்று கேக்கறீங்களா. மேலே படியுங்கள். சாரி, கீழே படியுங்கள்

http://www.nilacharal.com/tamil/jokes/tamil_comedy_252.asp

Saturday, March 11, 2006

காலம் மாறி போச்சு (ஆங்கிலத்தில்)

CLASSIC VERSION...

The ant works hard in the withering heat all summer long, building his house and laying up supplies for the winter.

The grasshopper thinks the ant's a fool and laughs & dances & plays the summer away. Come winter, the ant is warm and well fed.

The grasshopper has no food or shelter so he dies out in the cold.
-----------------------------------------------------------------
MODERN VERSION...
The ant works hard in the withering heat all summer long, building his house and laying up supplies for the winter.

The grasshopper thinks the ant's a fool and laughs & dances & plays the summer away.
Come winter, the shivering grasshopper calls a press conference and demands to know why the ant should be allowed to be warm and well fed while others are cold and starving.

BBC, CNN, AAJ TAK, NDTV show up to provide pictures of the shivering grasshopper next to a video of the ant in his comfortable home with a table filled with food. The World is stunned by the sharp contrast. How can this be that this poor grasshopper is allowed to suffer so?

Arundhati Roy stages a demonstration in front of the ant's house.

Amnesty International and Koffi Annan criticizes the Government for not upholding the fundamental rights of the grasshopper.

The Internet is flooded with online petitions seeking support to the grasshopper. Opposition MPs stage a walkout.

Left parties call for "Bharat Bandh" in West Bengal and Kerala demanding a Judicial Enquiry.
Finally, the Judicial Committee drafts the Prevention of TerrorismAgainst Grasshoppers Act [POTAGA]", with effect from the beginning of the winter.

The ant is fined for failing to comply with POTAGA and, having nothing left to pay his retroactive taxes, his home is confiscated by the government and handed over to the grasshopper in a ceremony covered by BBC,CNN, AAJ TAK and NDTV.

Arundhati Roy calls it "a triumph of justice".

Koffi Annan invites the grasshopper to address the UN General Assembly.

இது எப்படி இருக்கு?

(மின்னஞ்சலில் வந்தது)

Friday, March 10, 2006

படிக்காதவங்களே நல்லவங்க – தாயுமானவர் சொல்லறார்

தாயுமானவரின் தந்தை கேடிலியப்ப பிள்ளையின் காலத்திற்கு பிறகு திருச்சிராப்பள்ளியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் பெருங்கணக்கராக இருந்தார் தாயுமானவர். அரசு பணிகளை செம்மற செய்து வந்த போதிலும், அவருள்ளம் இறையருள் நாட்டத்திலேயே இருந்தது. எனவே அவர் இப்பதவியிலிருந்து வெளியேறினார். விராலி மலைப் பக்கம் சென்ற பொழுது அவருக்கு சித்தர்களின் கூட்டு ஏற்பட்டது. சித்தர்கணம் என்ற தொகுப்பை அவர் இந்த சந்தர்ப்பத்தில் பாடினார் என்று கூறப்படுகிறது.

கீழ் கண்டது சித்தர் கணத்திலுள்ள ஒரு பாடல்:

கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;
கற்றுமறி வில்லாதவென்
கர்மத்தை என்சொல்கேன் ? மதியையென் சொல்லுகேன் ?
கைவல்ய ஞான நீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன் ; கர்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன் ; வடிமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன் ;
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தக சித்தர்கணமே!
-----------------------------------
கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் – கல்வியைக் கல்லாதவர்களே நல்லவர்கள் நல்லவர்கள்

கற்றுமறி வில்லாதவென் கர்மத்தை என்சொல்கேன் ? – கல்வி கற்றும் அறிவு இல்லாத என் கர்ம பலத்தை என்ன சொல்லுவேன்?

கைவல்ய ஞான நீதி நல்லோருரைக்கிலோ – நல்லவர்கள் கைவல்ய பதவியைக் கொடுக்கின்ற ஞானநீதியை பற்றி சொன்னால்

கர்மமுக் கியமென்று நாட்டுவேன் – கர்மமே முதன்மையானது என்று நிலை நாட்டுவேன்

கர்மமொருவன் நாட்டினாலோ – ஒருவன் கருமத்தை நிலைநிறுத்தினால்

பழைய ஞானமுக் கியமென்று நவிலுவேன் – முன் சொன்ன ஞானமே முதன்மையானது என்று கூறுவேன்

வடிமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் – வடமொழியிலே வல்லவனான ஒருத்தன் வந்தால்

த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் – தமிழிலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரமாக சொல்லுவேன்

வல்ல தமிழறிஞர் வரின் – ஒரு வல்லமை பெற்ற தமிழ் அறிஞர் வந்தாலோ

அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – அங்கே வடமொழியின் சிறப்பு பற்றிய வாக்கியங்கள் எடுத்துரைப்பேன்

வெல்லாம லெவரையு மருட்டிவிட வகை வந்த – நியாயமாக வெல்லாமல் எவரையும் மருளும் படி செய்ய வகை ஏற்பட்டதிற்கு காரணமான

வித்தையென் முத்திதருமோ ? – வித்தையானது எனக்கு முக்தியைக் கொடுக்குமோ?

வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற – வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும் சமமாக கருதக்கூடிய சிறந்த நிலையைப் பெற்ற

வித்தக சித்தர்கணமே! – ஞானத்தினையுடைய சித்தர் கூட்டமே!
-----------------------------------
கல்வி அறிவைத் தருமென்றும், அவ்வாறு கற்றவேண்டியவற்றை கற்றும், அக்கல்வி கூறியபடி நடக்காத கற்றவர்களைக் காட்டிலும், கல்லாத பேர்களே நல்லவர்கள் என்று பறைகிறார் தாயுமானவர்.

முக்தியைக் கொடுக்கும் ஞானமே முக்கியம் என்று ஒருவர் கூறினால், அவரிடம் கருமமே முக்கியம் என்று உரைத்தும், கருமம்தான் முக்கியமென்று சொல்பவரிடம், ஞானம்தான் பெரிது என்று விவகரித்துரைப்பேன்.

வட நாட்டு வித்தகரிடம் தமிழின் பெருமையையும், தமிழறிங்கர்களிடம் வட மொழியின் சிறப்பை எடுத்தோதுவேன்.

இவ்வாறொருவரை வெல்லாமல் மருளும்படி செய்யும் வித்தை என்ன பயனைத் தரும்? வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் சமமாக கருதும் நிலையடைந்த சித்தர் கூட்டமே!
-----------------------------------
சில சந்தேகங்கள்:

கைவல்யம் என்றால் என்ன? இது தமிழா அல்லது ஏதாவது வடமொழிச் சொல்லா?

ஒருவன் ஒன்றை பற்றி கூறும் பொழுது, மற்றதுதான் அதை விட நல்லது என்று வாதாடுவது எந்த வகையில் நல்லது?

வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த வித்தையென் முத்திதருமோ ? – இதற்கு இன்னும் நல்ல முறையில் யாரவது விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

நன்றி.

Thursday, March 09, 2006

தின்னவேலி பாலஸ்டிவேல்ஸ்

கையைத் தூக்குங்க, நீங்க எம்புட்டு பேருய்யா தின்னவேலி (திருநெல்வேலி) ஆளுங்க? சினிமால்லாம் பாப்பீயளா? அப்போ உங்களுக்கு கட்டாயமா ஜங்சன்லே இருக்கிற பாலஸ்டிவேல்ஸ் தெரிஞ்சிருக்குமே.

Palace D'Wales அப்பிடிங்கிற ரெண்டு வார்த்தை கொஞசம் கொஞசமா மருவி பாலஸ்டிவேல்ஸ்ன்னு ஆயிடுச்சு. எங்க ஆளுங்க அதை Paalas-tee-vels அப்பிடின்னு செல்லமா ஒரே வார்த்தையாச் சொல்லுவாங்க. அந்தக் கால அழுக்கான, இருட்டான தியேட்டர். பொதுவா ரெண்டு ஷோதான் போடுவான், சாயந்திரம் 6:30 மணி, ராத்திரி 9:30 மணி. சில சமயம் புதுப்படம் ஏதாவது ரீலிஸ்ன்னா மதியம் 2:00 மணி ஷோவுமிருக்கும், ஒரு கருநீலகலர் படுதாவ போட்டு இருட்டு பண்ணி ஃபிலிம் காட்டுவான்.

செங்கோட்டை, திருச்செந்தூர் போற இரண்டு இரயில் தண்டவாளங்களை தொட்டமாதிரி இருக்கும் இந்த தியேட்டர். படம் நடக்கும்போது, இரயில் விசில், இரயில் போகும் கடகடா சத்தங்கள் இலவச இணைப்புகள். ராவுலே, தட்டாகுடித்தெரு வீட்டு திண்ணைலே உக்காந்தா நைட்ஷோ வசனமெல்லாம் நல்லா கேக்கும்.

1965ம் வருஷ விவஹாரம் இது. தரை டிக்கெட் (31 பைசா) , பெஞ்சு டிக்கெட் (66 பைசா), சேர் டிக்கெட் (1ரூ 6 பைசா), ஸோஃபா டிக்கெட் (1ரூ 66 பைசா). டிக்கெட் விலையெல்லாம் வரி சேத்துதான். தரை டிக்கெட் வாங்கினா, பெயருக்கேத்தமாருதி, தரையிலேதான் உக்காரணோம். ஆத்து மண் போட்டிருப்பான். அதை குமிச்சி குமிச்சி அதுமேலே ஒக்காந்திருப்பாங்க. துப்பல்கள், குழந்தைகளின் ஒண்ணுக்கு, இரண்டுக்கு எல்லாம் சர்வ சாதரணமா எல்லா இடத்திலுமிருக்கும். பீடி குடிச்சு பிகிலடித்தவாறே படம் பாப்பாக மக்களெல்லோரும். அந்தக் காலத்திலே எங்கிட்டு வேணா பீடி சிகரெட்டு எல்லாம் பிடிக்கலாமில்லே. இப்போ மாதிரியில்லை. கிட்டமணியய்யர் மாதிரி பெரிய வீட்டு ஆளுங்களெல்லாம் எப்பவுமே ஸோஃபா டிக்கெட்லேதான் படம் பாப்பாக.

அங்கே கிடைக்கும் சில சுவாரசியமான அயிட்டங்கள்: அவிச்ச கடலை, அச்சு முருக்கு, கோலி சோடா, இஞ்சி மொரபா, கடலை முட்டாய் வகையறா. என்ன விலைன்னு ஞாபகமில்லை. பீச்சாங்கை அழுக்கு கட்டவிரல அந்த கோலிலே வச்சு, வலது கையாலே ஒரு அடி அடிச்சு அத தொறக்குறதே ஒரு தனி கலை. எல்லாருக்கும் சுளுவா வந்துடாது. கோலி சோடா குடிக்கத்தெரியாம சட்டையெல்லாம் தொப்பமா நனைச்சது நல்லா நினைவிருக்கு.

ஒரு படம் ரீலிஸ்ன்னா ஒரே கொண்டாட்டம்தான். ஒரு ரெட்ட மாட்டு வண்டிலே ரெண்டு பக்கத்திலும் தட்டி மாட்டி அதுலே கலர் போஸ்டர் ஒட்டியிருப்பாக. ரண்டன் டக்ககுன ரண்டன் டக்குனன்னு மோளம் அடிச்சு ஒரு ரோஸ் கலர் பேப்பர்லே அடிச்ச நோட்டீஸ் கொடுத்துகிட்டே ரோடு ரோடா போவாக. அந்த நோட்டீஸ் வாங்க ஒரே அடிதடிதான். எங்க அப்பா அப்படியே கைய நீட்டி ஒரு நோட்டீஸ் வாங்கி கொடுத்தவுடன் அதை மத்த சேக்காளிககிட்டே காமிச்சி பீத்தின நாட்கள் எத்தனையோ. எங்க வீட்டு பிள்ளை ரிலீஸுக்கு கலர் நோட்டீஸ். அந்த எம்ஜீயார் சாட்டை அடிக்கிற மாதிரி போஸ் கொடுத்த படத்தை கட் பண்ணி என் பீரோவிலே ஒட்டி மார்தட்டி பெருமை கொண்ட அழகே தனிதான்.

இதெல்லாம் நெனச்சா, "நெல்லை நகரில் யாம் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ"ன்னு பாடத்தான் தோணுது!!!

Wednesday, March 08, 2006

இருசக்கர புவி ஊர்தி வண்டி - ஓட்ட பயிலல்

அக்கம் பக்கம் பாக்காதே
ஆளைக் கண்டு மிரளாதே
இடுப்பை இடுப்பை வளைக்காதே
ஹாண்டில் பாரை ஒடிக்காதே

நீதிக்குப் பின் பாசம்ன்னு நினைக்கிறேன்....எம்ஜியார் சரோஜாதேவிக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுப்பார். ( சைக்கிளை இருசக்கர புவி ஊர்தி வண்டின்னு பெரியவங்க சொன்னாலும் நம்ம சைக்கிள்ன்னே வைச்சுப்போம், கீ போர்ட்லே அடிக்க சுளுவா இருக்கே!). பாட்டு முடியறதுக்குள்ளே, அம்மா சும்மா ஜில்லுன்னு சைக்கிளோட்ட ஆரம்பிச்சுடுவாங்க...

இவ்வளவு ஈஸியா நிஜ வாழ்க்கையிலுமிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்.

ஆறாப்பு படிக்கையிலே மொதமொதலா சைக்கிள் கத்துகிற ஒரு பாக்யம் கிடைத்தது. எட்டாப்பு 'ஸி' செக்ஷ்ன்லே படிக்கிற கனகராஜ் தானாவே வந்து எனக்கு சொல்லிதாரேன்னாம்லே. எவ்வளவு நல்ல மனசு அவனுக்கு, தங்கமான் புள்ளே. டவுண்லேயுள்ள சினிமா கொட்டாகார அய்யா அவன் அம்மாவை வெச்சியிருக்காறுன்னு தெருலே எல்லாரும் பேசிப்பாக. வாரம் இரண்டு மூணு நாள் சாயங்காலமா பிளஷர் கார்லே வருவாரு, ராவோட ராவா கிளம்பிப் போயிடுவாரரு. யாரு எப்படி இருந்தா என்ன, நமக்குதான் கனகராஜ் இருக்கான்லே சைக்கிளோட்ட சொல்லிக் கொடுக்க.

அய்யனார் சைக்கிள் நிலையம்ன்னு சுண்ணாம்பாலே எழுதின போர்டு இருக்கும் அந்த சைக்கிள் வாடகைக்கு தரும் கடைலே. "நிலையம்"லே உள்ள அந்த "லை", எம்ஜியார் கொண்டு வந்த சீர்திருத்ததிற்கு முன்னாலே உள்ள "லை". வயத்துலே கட்டி வந்த பாம்பு ஒன்னு படமெடுத்து ஆடற மாதிரி இருக்குமே, அந்த "லை". ஒரு மணி நேர வாடகை பண்ணன்டு பைசா. நம்மெல்லாம் போய் கேட்டா தரமாட்டார் அந்த கடைக்காரர். க்யாரண்டி கொடுக்க ஆளு இருக்காம்பார், மாரிமுத்துங்ற அந்த கடைச் சொந்தக்காரர். கனகராஜ் போனா அதெல்லாம் கேக்கமாட்டார். பெரிய எடமாச்சே.

நம்மட்ட இருந்து நாலணா வாங்கிட்டு பத்தே நிமிஷத்தில், சும்மா ஜம்முன்னு ஒரு சைக்கிளை ஓட்டிகினு வருவான், கனகராஜ். அவன் குரங்கு பெடல் போட்டு சைக்கிளே ஓட்டிக்கினு வர அழகே தனி.

தட்டாக்குடித் தெருலே ராமச்சந்திரய்யர் வீட்டுக்குப் பக்கத்திலே, கோணாமாணா முட்டை வடிவத்திலே ஒரு பெரிய கல் இருக்கும். அதிலே காலை வச்சு, சைக்கிள் மேல ஏறணம். இந்த சைடிலே ரெண்டு பசங்க, அந்த பக்கம் ரெண்டு, ஒரு தள்ளு தள்ளுவாங்க. நேராகவே போவாது வண்டி, நல்லா குடிச்சவன் நடக்கிற மாதிரி சும்மா லொளக்கு லொளக்குன்னு ரெண்டு பக்கமும் விழும். கூடவே பசங்களோட குத்தும் விழும். முதல் ஒரு வாரம் முழுக்க இதேதான் கதை.

அந்த வாரம் ஃபுல்லா சைக்கிளோட்டற சொப்பனம்தான். ஒரு கைய்ய விட்டு ஒட்டறது, ரெண்டு கைய்ய விட்டு ஓட்டறது, கொரங்கு பெடல் போடறது, டபுள்ஸ் போறது இத்யாதி இத்யாதி. ஏன், கனவுலே நானே சைக்கிளோட்ட கூட சொல்லிக் கொடுத்திறுக்கேம்ல...

கொஞ்சம் கொஞ்சமா அந்த பேலன்ஸ் பண்ற பக்குவம் வந்து தனியே சைக்கிள் ஒட்டறதுக்குள்ளே ஒரு மாசம் பறந்து ஓடி போயிட்டு. எனக்கு கத்துக் கொடுத்த கனகராஜுக்கு ஃபீஸ் என்னான்னா, ஒவ்வொரு தடவையும் பதினைந்து நிமிஷம் அவனுக்குன்னு தனியே ஓட்ட கொடுக்கணும், அவ்வளவுதான். அதுக்கு அப்புறம் நான் சைக்கிள் ஒட்ட சொல்லிக் கொடுத்தவங்க லிஸ்ட் ரொம்ப பெரிசு.

வழிவழியா வந்த இந்த ஓட்டக் கத்துக் கொடுக்கும் கலை இப்போ இருக்குதாங்க?

Tuesday, March 07, 2006

ப்ளேன் ஒட்டுறாங்கோ டேய் ப்ளேன் ஒட்டுறாங்கோ

மக்களே அடுத்த முறை ஆகாய விமானத்தில் ஏறுமுன், ப்ளேன் ட்ரைவர பத்தி நல்ல விசாரிசிட்டு அப்புறமா வண்டி ஏறுங்கோ சாமியோவ்... பத்திரமா உசிரோட ஊர் சேரனமில்லே...





















ஒரு டஜன் அருமைகளல்ல, அறுவைகள்-விடைகள்

பிடிங்க பதிலை.
முதற்கண், உற்சாகமாக கலந்து கொண்ட எல்லாருக்கும் மனமுவந்த நன்றிகள் உரித்தாகுக.

எல்லா பதிலுக்கும் சரியாக பதில் சொன்ன சுரேஷுக்கு பரிசு வழங்குமாறு நிலாக்கா அவர்களைக் கேட்டு கொள்கிறேன். இன்னும் இம்மாதிரி புதிர்கள் தேவைதானான்னு சொன்னா நல்லா இருக்கும்....

1. பெண் ஸ்பின் பௌலரோட பெயர் என்னவோ? - "பால திரிபுர சுந்தரி"
2. கோகுலாஷ்டமிக்கும் கம்யூனிஸமுக்கும் என்ன ஒற்றுமையோ? - "கால் மார்க்ஸ்"
3. ஈக்கள் எப்படி communicate பன்னும்? - "ஈ-மெயில்"
4. ஷார்ட் சர்க்யூட்டுக்கும் பொறாமைக்கும் என்ன ஒற்றுமையோ? - "வயர் (wire) எரியும்"
5. சண்டை வந்தா யாரு ஜெயிப்பாங்க? மந்தவெளியா, மைலாப்பூரா? - "மைலாப்பூர், என்னா அங்கேதான் டாங்க் இருக்கு"
6. துபாய் போஸ்ட் ஆஃபிஸ்லே ஸ்டாம்ப் வாங்கிட்டு உடனே எல்லாரும் வெளிலே ஏன் போறாங்க? - "வெளியிலே ஒட்ட-கம் இருப்பதாலே"
7. ஒரு அரேபிய ஷேக் டானிக் வாங்கிட்டு குடிக்கவே இல்லை, ஏன்? - "Shake well before use ன்னு பாட்டிலில் எழுதி இருந்தது".
8. அந்த பொண்ணுக்கு என்ன வாசனை பிடிக்கும்? - "சீனி-வாசனை"
9. மழை மேகம் – இதற்கு எதிர் பதம் என்ன? - "மழை மே நாட் கம்"
10. Areaக்கு எதிர் பதம் என்ன? - "எறங்குய்யா"
11. தோசைலே ஏன் ஒட்டை ஒட்டையா இருக்கு? - "சுடறதனாலே"
12. எந்த மிருகத்துக்கு மதம் பிடிக்கும்? - "யானைக்குத்தான்"

Friday, March 03, 2006

ஒரு டஜன் அருமைகளல்ல, அறுவைகள்

கடவுள் மேலே சத்தியம் பண்ணுங்க…ஹரிஹரன்ஸை அடிக்க மாட்டேன்னு…. சரிதானே, ரொம்ப சந்தோசம்…..

கீழே உள்ள ஒரு டஜன் கேள்விக்கு விடை பின்னூட்டமா போடுங்க…எல்லாம் கரீட்டா போட்டா நிலாக்காகிட்ட ஒரு பரிசு தர சிபாரிசு பண்ணறேன்…ஜமாய்ங்க மக்களே…


1. பெண் ஸ்பின் பௌலரோட பெயர் என்னவோ?
2. கோகுலாஷ்டமிக்கும் கம்யூனிஸமுக்கும் என்ன ஒற்றுமையோ?
3. ஈக்கள் எப்படி communicate பன்னும்?
4. ஷார்ட் சர்க்யூட்டுக்கும் பொறாமைக்கும் என்ன ஒற்றுமையோ?
5. சண்டை வந்தா யாரு ஜெயிப்பாங்க? மந்தவெளியா, மைலாப்பூரா?
6. துபாய் போஸ்ட் ஆஃபிஸ்லே ஸ்டாம்ப் வாங்கிட்டு உடனே எல்லாரும் வெளிலே ஏன் போறாங்க?
7. ஒரு அரேபிய ஷேக் டானிக் வாங்கிட்டு குடிக்கவே இல்லை, ஏன்?
8. அந்த பொண்ணுக்கு என்ன வாசனை பிடிக்கும்?
9. மழை மேகம் – இதற்கு எதிர் பதம் என்ன?
10. Areaக்கு எதிர் பதம் என்ன?
11. தோசைலே ஏன் ஒட்டை ஒட்டையா இருக்கு?
12. எந்த மிருகத்துக்கு மதம் பிடிக்கும்?

Thursday, March 02, 2006

தினமலருக்கு ஒரு “ஓ” போடுங்களேன்….

“பதிவிட்ட பொழுதிற் பெரிதுவக்கும் தன் ப்ளாகை
தினமல ரச்சில் கண்ட நாள்”….

என்று மதிலின் மேலேறி வாய்விட்டு இவ்வுலகறிய கூவ ஆசைதான். ஆனால் நம் தன்னடக்கம் தடுக்கின்றதே :-). ப்ளாக் உலகிற்கு வந்து முழுசாக ஒரு மாதமாகவில்லை, உருப்படியாக ஒரு நாலு பதிவு கூட போடவில்லை, இவனுக்கு வந்த பவிசைப் பார் என்று எதிர்கட்சியினரில் சிலர் முணுமுணுப்பது காதில் விழாமலில்லை.

எது எவ்வாரிருப்பினும், ஒரு நல்ல பதிவைத் தேடிப்பிடித்து (இது எப்படி இருக்கு) தங்களது 28 பிப்ரவரி 2006 தினமலரில் அச்சிட்டமைக்கு எனது மனமுவந்த நன்றி… ஒரு பெரிய “ஓ”வும் கூட, தினமலருக்கு…

Saturday, February 25, 2006

நான் பிடிச்ச நான்கு ஆட்கள்

ஏதோ கம்முன்னு இருந்த நம்மை இந்த விளையாட்டுக்கு இழுத்துவிட்டவரு இந்த கொத்தனார் . ஒரே டென்சன் பார்ட்டி இந்த ஆளு. நம்மளை வேற வழிகாட்டி, டிராஃபிக் சிக்னல்-ன்னுட்டு என்னலாமே சொல்லி வேற விட்டாரு. வேற வழியே இல்லை. எதாவது ஒளறிக் கொட்டியே தீரணம். பகவான் விட்ட வழி.

நானிருந்த நாலு ஊர்கள்:
1. திருநெல்வேலி:
பிறந்தது வண்ணாரபேட்டேல. உயர் நிலைப்பள்ளி படித்தது ஹிந்து காலேஜ் ஹைஸ்கூல்லே. தாமிரபரணிலே திருட்டு குளி, சினிமா பாக்க வைத்திருந்த பைசாவே மூணு கார்ட்லே தொலைத்தது, பொது நூலகத்தில் பொன்னியின் செல்வன் படித்தது, தரை டிக்கெட்லே படம் பார்த்தது எல்லாம் இங்கதான். நாங்க இருந்த மாளிகை மாதிரி இருந்த மனை இப்போ ஒரு மருத்துவமனை!!

2. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்:
கல்லூரி வாழ்க்கையுடன் துவக்கம் மெட்ராஸ் (இப்போதான்யா சென்னை). தமிழ் மீடியத்தில் படித்தவன் சரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொண்ட இடம். முட்டை சாப்பிட, பீர் அடிக்க, திருட்டு சினிமா பார்க்க என்று கும்மாளமடித்த இடம்.

3. பம்பாய், இப்போதய மும்பய்:
ஏர் இந்தியாவில் வேலை கிடைத்தவுடன் ஒரு பொட்டியோடு வந்து, Paying guest accommodationல் வெங்கிடசாமியுடன் தங்கி, திருமணம் என்ற ஒரு ஆயுள் தண்டனை பெற்ற இடம் (வெங்கிடசாமியுடன் அல்ல ஸார்). முதல் இரண்டு வருடங்கள் பிடிக்காத, இப்போது பிரிய மனமில்லாத ஒரு அற்புத நகரம்.

4. பஹ்ரைன் (Bahrain):
பம்பாயில் வீடு வாங்கப் போய், தலைநிறைய கடன் வந்து, அதை தீர்ப்பதற்காக வேலை பார்க்க வந்த இடம். அரேபிய நாடுகளில் மிகவும் முற்போக்கான எண்ணம் கொண்ட இடமிது (1984ம் ஆண்டு). ஓரு சின்ன கிருட்டிணர் கோவிலுமுண்டு. நண்பர்கள் நிறைய கிடைத்த ஒரு இடம்.

செல்ல விரும்பும் நாலு இடங்கள்:
1. எகிப்து:
இந்நாட்டு சரித்திரம், பிரமிடுகள். ஸ்பின்க்ஸ், நைல் நதி எல்லாமே ஒருவரை பிரமிக்க வைக்கும். கூடிய சீக்கிரமே செல்வேன்.
2. கீரிஸ் (Greece):
இதுவும் சரித்திரப்புகழுக்காகவே.
3. இமயமலைப் பகுதிகள்:
புகைப்படத்திலும், நேஷ்னல் ஜியாக்ரஃபிக் சானலிலும் மட்டும் பார்த்தது. வயசானவர்கள் எல்லாம் போகக்கூடாது என்று சொல்வதற்குள் போய் வரணம்.
4. வெஸ்ட் இண்டீஸ்:
சிறந்த கடற்கரைகளும், அது சார்ந்த மிகச் சுவாரஸ்யமான விஷயங்களும் ;-)

பிடித்த நாலு காரியங்கள்:
1. குழந்தைகளுடன் (குறிப்பாக ஊணமுற்றவர்கள்) விளையாடுவது. Amazing way for relaxing.
2. இசை நன்கு தெரிந்தவர்களுடன் அளவளாவுதல்.
3. புதுப்புது பதார்த்தங்களை சமைத்து அதை அடுத்தவர்களை சாப்பிட வைத்து பார்ப்பது.
4. சனி, ஞாயிறுகளில், மதிய உணவிற்கு பிறகு போடும் ஒரு அமர்க்களமான தூக்கமும் அதன் பின் பருகும் ஒரு லோட்டா காப்பியும்.

பிடித்த நான்கு உணவு அயிட்டங்கள்:
1. சீஸ், (மஷ்ரூம் என்று ஆங்கிலத்தில் மருவப்படும்) நாய்க்கொடை போட்ட எந்த பதார்த்தமும்.
2. பெங்களூரிளுள்ள “Cosmo Village” என்ற இடத்தில் கிடைக்கும் fusion ஐயிட்டங்கள் (e.g. spicy thai curry with kerala parathas).
3. தயிர்சாதம் ஊறுகாயுடன்.
4. சுக்கு காப்பி (திருநெல்வேலி சங்க்சன் பெருமாள் கோவிலிலுள்ள அய்யர் கடையில் அமர்க்களமாக இருக்கும்)

நமக்கு பிடித்த நாலு கலைஞர்கள்:
1. டி.எம்.கிருஷ்ணா:
மிகச்சிறந்த இளம் கர்னாடக இசைக்கலைங்கர். எல்லாவற்றிக்கும் மேலாக, ஒரு நல்ல நண்பர், மனிதர்.
2.: மறைந்த எம் டி இராமநாதன்:
பிரமிக்க வைக்கும் திறன்கள் கொண்ட, எங்கேயோ இருக்க வேண்டிய, அதிர்ஷ்டம் அதிகமில்லாத, அற்புத கர்னாடக இசைப் பாடகர்.
3. எம் எஸ் விஸ்வநாதன்:
ஐம்பது வருடங்களாயினும், எல்லா பிரிவு மக்களையும் கவரும் பாடல்களை படைத்த ஒரு இசை மேதை.
4. Of course, கமலஹாஸன்:
எம் டி இராமநாதன் of தமிழ் திரையுலகம். எதைச் செய்தாலும் “அட” என்று சொல்ல வைப்பவர்.

பிடிக்காத நாலு அயிட்டங்கள்:
1. அடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் வண்டி ஓட்டும் ஓட்டுனர்கள். In general, our Indian traffic.
2. வள வளவென்று வாய்மூடாமல் சுயபுராணம் பேசும் ப்ரகஸ்பதிகள்.
3. சென்னை ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள்.
4. முன்னில் புகழ்ந்து, பின்னால் குறை கூறுவோர்.

அழைக்க விரும்பும் நால்வர்:
(இந்த விளையாட்டுக்கு புச்சும்மா.. நாலு பேர் கிடைப்பாங்களா என்பது சந்தேகமே….)
1. கௌசிகன்
இவர் கொத்தனார் சொன்ன பிறகும் போடலை. அதனாலே மறுபடியும்.
2. கைப்புள்ள
எதோ நம்ம பதிவுலே ஒரு பிண்ணோட்டம் போட்டார் என்ற நன்றிக்காக
3. நிலா
இவர் நடத்துகிற விளையாட்டில் நம்மையும் சேர்த்திட்டார். அதனாலே ஹி ஹி ஹி.
4. Jayashree
நம்மளையும் நம்ம புதிர்களையும் மதிச்சு, அப்புதிர்களை விடுவித்ததற்காக

அவ்ளவுதான் சாமியோய்…..நம்மளை விட்டுடுங்கோ அய்யாமார்களே, அம்மாமார்களே…

Thursday, February 23, 2006

தாயுமானவரும் ஹாலிவுட்டும்

கீழே இருப்பது தாயுமானவரின் பாடல்.
'தேஜோமயானந்தம்' என்ற ஒரு கருத்தின் கீழுள்ள பல பாடல்களிலொன்று.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே
- தாயுமானவர் (கிபி 1608 - 1662)

குதிரை, மதயானையை வசமா நடத்தலாம்.கரடி வெண்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்கத்தின்மேலேறி உட்கார்ந்து கொள்ளலாம். பாம்பை (கட்செவி) ஆட்டுதல் கூடும். நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலேகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம். வேற யாரும் கண்டுக்காமே உலகத்திலே உலா வரலாம். தேவர்களை (விண்ணவர்களை) வேலை வாங்கலாம். சதாகாலமும் இளமையோட இருக்கலாம். வேறொரு உடலில் புகுந்து கொள்ளலாம். நீரின் (சலம் - ஜலம்) மேல் நடக்கலாம். நெருப்பின் (கனன் - கனல்) மேல் தங்கி இருக்கலாம். தமக்கும் மேலான பிற சித்திகளைப் பெறலாம்.

ஆனா, மிக்க கடினம் யாதெனில் (இங்கதான் ஒரு போடு போடறார், தாயுமானவர்) "மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது". உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேசோமயானந்தமே....

சும்மா பொத்திகினு இருக்கிறது ரொம்ப ரொம்ப கட்டம்ங்கிறாரு. இந்த ஒரு விஷயம் அந்த காலத்திலிருந்தே ஒரு கஷ்டமான காரியமாகத்தான் இருந்திருக்கு.

17ம் நூற்றாண்டிலேயே தாயுமானவர் சொன்னதையெல்லாம் இப்போ ஹாலிவுட்லே ஃபிலிம் காட்டிக்கினு இருக்காங்க. ஸ்டார் ட்ரெக், தி பிக் (big), இன்விஸிபிள் மான் அப்பிடின்னு கலாய்க்கிறானுங்க அவங்க.....

தாயுமானவருக்கு ஏதாவது ராயல்டி கொடுத்தானுங்களா?

Tuesday, February 21, 2006

ஏன் ஏன் ஏன்......

அது இல்லீங்கோ. சிவாஜி கணேசன், வஸந்தமாளிகை படத்தில் பாடும் "ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்" பாட்டில் வரும் "ஏன் ஏன் ஏன்" மாதிரியில்லை இது. மர்ஃபீஸ் லா என்று கேள்விப்பட்டிருப்பீர்களே, "ஏதேனுமொன்று தவறுமெனில் அது தவறியே தீரும்". வாழ்க்கையில் இந்த மர்ஃபீஸ் லா போன்றவை நம்மை பல முறை பாதித்திருக்குமே! கீழ் கண்டவைகள் ரொம்ப பரிச்சியமாக இருக்கோ?

1. ஒரே காரியத்திற்கு இரண்டு வரிசைகள் இருக்குமாயின், நாம் நிற்கும் வரிசை மட்டும் நத்தை போலூறுவது ஏன் ஏன் ஏன்?
2. கை எட்டாத இடத்திலேயே அதிகம் அரிப்பது ஏன் ஏன் ஏன்?
3. இடம்-வலம் காட்டும் கண்ணாடி, மேல்-கீழ் காட்டாதது ஏன் ஏன் ஏன்?
4. தொலைபேசியில் ராங் நம்பர்கள், என்கேஜ்டாகவே இருப்பதில்லையே ஏன் ஏன் ஏன்/
5. தவறாது தகராறு செய்யும் கார், மெக்கானிக் முன் நல்ல பிள்ளையாக் இருப்பது ஏன் ஏன் ஏன்?
6. ஒரு பெரிய சாவிக்கொத்தில், எப்போதும் கடைசியாக முயற்சி செய்யும் சாவியே பூட்டைத் திறப்பது ஏன் ஏன் ஏன்/
7. எந்த சாதனமும், க்யாரண்டி ப்ரீயட் முடிந்த மறுநாளே ரீப்பேராவது ஏன் ஏன் ஏன்?
8. இரண்டு இடத்திற்கு இடையேயுள்ள மிகவும் குறுக்கு வழி எப்பொதும் ரிப்பேராக இருப்பது ஏன் ஏன் ஏன்?

இது மாதிரி உங்களுக்கெதாவது தெரிந்தால், எடுத்து விடுங்களேன்...

Friday, February 10, 2006

அருமைத் தத்துவங்கள்

உலகமகா அறுவை தத்துவங்களின் தொகுப்பு...அடி விழாம் இருந்தா சரி:

1. பஸ்லே கலெக்டரே எறினாலும் முதல் ஸீட் என்னவோ கண்டக்டருக்குதான்.
2. உலகம் தெரியாம வளர்ந்தா அவன் வெகுளி - அதுவே கிரிகெட் தெரியாம வளர்ந்தா அவன் கங்குலி.
3. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ணலாம், ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா?
4. டிக்கெட் வாங்கி உள்ள போனா அது சினிமா ; உள்ளே போய் டிக்கெட் வாங்கினா அது ஆப்ரேஷன் தியேட்டர்...
5. சைகிள் காரியரில் டிபன் கொண்டு போகலாம் ஆனா டிபன் காரியரில் சைகிள் கொண்டு போக முடியாது.
6. ஆம்பிளைகளை கொண்டு போக ஆம்புலன்ஸ்...பொம்பளைகளை கொண்டு போக பொம்புலன்ஸ் கிடையாது...
7. புயலாலே கரையைக் கடக்க முடியும் ஆனா கரையாலே புயல கடக்க முடியுமா?